சசிகலா கமென்ட்.. பிரஸ் மீட்டில் கேள்விக்கு பதில் அளிக்காமல் சட்டென எழுந்து சென்ற செங்கோட்டையன்!
சென்னை: தவெக உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று கோபியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் சட்டென எழுந்து கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு நகர்ந்து சென்றார் செங்கோட்டையன்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் அண்ணல் அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், "தமிழகம் முழுவதும் தவெக சார்பில் டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தவெக தலைமை கழகத்தின் ஆணைப்படி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குறிப்பாக ஆணவம் என்பது உண்மையை மறைக்கும், கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது. இளைஞர்களின் எழுச்சி நாயகனாக எதிர்கால தமிழகத்தை ஆளப்போகின்ற தலைவர் விஜய் சுற்று பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இளைஞர்களின் எழுச்சி நாயகனாக மட்டுமன்றி எதிர்கால தமிழகத்தின் ஆளும் சக்தியாக தமிழக மக்களால் பார்க்கப்படுகிறார் விஜய்" என்றார்.
இதையடுத்து அங்கிருந்த செய்தியாளர்கள், "ஒருவர் மீது இருக்கும் கோபத்தில் நீங்கள் எடுத்திருக்கும் முடிவு அவசரப்பட்டு எடுத்த முடிவு என சசிகலா விமர்சித்துள்ளாரே" எனக் கேள்வி ஏழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த செங்கோட்டையன், அடுத்தடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் உடனே எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கடந்த நவம்பர் 27ஆம் தேதி விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். கட்சியில் இணைந்ததுமே அவருக்கு மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் ஆகிய பதவிகளை வழங்கினார் விஜய்.
தவெகவில் இணைந்த போது செங்கோட்டையன் சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருந்தது, கட்சியில் இணைந்த அன்றே தவெக நிர்வாகிகளுடன் சென்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது, அலுவலக பேனரில் விஜய் படத்துடன் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களை வைத்தது, கார்த்திகை தீபத் திருவிழா வாழ்த்துச் செய்தியில் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது என செங்கோட்டையன் சலசலப்புகளை எதிர்கொண்டு வருகிறார்.
அதேபோல் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரையும் சந்தித்திருந்தார். இந்தச் சூழலில் திடீரென அவர் விஜய்யை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது சர்ச்சையைக் கிளப்பியது.
செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பற்றி நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, "ஒருவர் மீது கோபம் இருக்கிறது என்பதற்காக பெரிய முடிவுகளை அவசரப்பட்டு எடுக்கக் கூடாது. மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் வந்தவர்கள் இதுபோலச் செய்வதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை." எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications