தவெக மாநாட்டுக்கு நிலம் அளித்தவர்களுக்கு விஜய் அளிக்கும் சூப்பர் விருந்து
சென்னை: விக்கிரவாண்டி மாநாடு நடத்துவதற்கு நிலம் அளித்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பனையூரில் விருந்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், கட்சியன் கொடியை ஏற்றிவைத்து, கொள்கைகள் குறித்து தெரிவித்திருந்தார். திமுக தனது அரசியல் எதிரி என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல, பாஜக சித்தாந்த எதிரி என்றும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றும் கூறியிருந்தார். திமுக, பாஜக கட்சிகள் விஜய்க்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வருகின்றன. விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் விஜய்க்கு எதிராக கூறியிருந்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜயை கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுகவும் விஜய் அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் திருமாவளவன் மற்றும் விஜய் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. டிசம்பர் மாதம் முதல் விஜய் மண்டல வாரியாக விசிட் அடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தவெகவில் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் சேர்க்கைக்கு என தனி செயலியை நடிகர் விஜய் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தார். உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டதில் இருந்தே லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் அதில் இணைந்து வருவதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாவட்ட வாரியான சுற்றுப் பயணத்திற்கு முன்னர் ஆட்சி செய்த மற்றும் ஆட்சி செய்து வரும் கட்சிகளில் ஊழல் பட்டியலைத் தயார் செய்ய தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக, அதிமுக கட்சியின் ஊழல்களைப் பற்றி பொதுமக்களிடம் பிரசாரத்தில் ஈடுபடும் முன்பு அதற்கான ஆதாரங்கள் நம்மிடம் இருக்க வேண்டும். அதன் பிறகே குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம் என்று நிர்வாகிகளிடம் விஜய் ஆலோசனை தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், முடிந்தால் ஊழல் பட்டியலுடன் ஆளுநரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதெல்லாம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியிருந்த நிலையில், விக்கிரவாண்டி மாநாட்டுக்கு நிலம் அளித்தவர்களுக்கு பனையூரில் விருந்து வைத்து கெளரவிக்க விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 230 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த விக்கிரவாண்டி மாநாட்டுக்கு பல்வேறு நில உரிமையாளர்கள் நிலத்தை கொடுத்திருந்தனர். இதில் விவசாய நிலங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மாநாடு முடிந்த பிறகு மீண்டும் விவசாயம் செய்யும் வகையில் நிலத்தை ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்று ஒப்பந்தம் போட்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள், விவசாயிகளுக்கு கட்சித் தலைவர் விஜய் இன்று விருந்து அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருந்துக்கான ஏற்பாடுகள் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்த விருந்தில் நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் குடும்பத்துடன் கலந்துகொள்ள உள்ளனர். நிலம் வழங்கி உதவி செய்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விஜய் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications