தவெக கேட்ட இடத்தில் அனுமதி மறுத்த பெரம்பலூர் காவல்துறை! விஜய் பேசுவதற்கு வேறு இடத்தில் அனுமதி
சென்னை: தவெக தலைவர் விஜய் வரும் 13 ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்திக்க உள்ளார். பெரம்பலூரில் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்துள்ள விஜய், அடுத்ததாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி வரும் 13 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை அவர் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.

திருச்சியில் தனது பிரச்சாரத்தை 13 ஆம் தேதி தொடங்கும் தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையிலும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொடர்ந்து டிசம்பர் மாதம் இறுதி வரை தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். முதற்கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வருகிற 13 ஆம் தேதி முதல் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மரக்கடை பகுதி எம்.ஜி.ஆர் சிலை அருகே தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு 23 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையம் மற்றும் காமராஜர் வளைவு பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கடிதம் வழங்கினார். இந்நிலையில் பெரம்பலூரில் விஜய் பிரசாரத்திற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என தகவல் வெளியானது.
விஜய் பிரச்சாரம் குறித்து தவெக சார்பில் சரியான பதில் அளிக்கவில்லை எனவும் தவெகவினரிடம் வேறு இடத்திற்கு மாற்றும்படி கூறியும் அதுதொடர்பாக எதுவும் தெரிவிக்காததால் பெரம்பலூர் மாவட்டத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி விஜய்யின் சுற்றுப்பயணம் நடக்குமா அல்லது வேறு மாற்றங்கள் இருக்குமா என தவெக தொண்டர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர்.
இதுகுறித்து பரிசீலனை செய்த பிறகு அறிவிக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்து இருந்த நிலையில், இன்று தமிழக வெற்றி கழகத்தின் மாநில வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி அரவிந்தன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பாலபரணி உள்ளிட்ட நிர்வாகிகள் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், பெரம்பலூரில் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கேட்ட காமராஜர் வளைவுப் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மேற்கு வானொலித்திடல் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது, பிரச்சாரத்தின் போது பட்டாசு வெடிக்க கூடாது, காவல்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்ற பிறகு தான் விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் வைக்க வேண்டும், கட்சியின் தலைவர் விஜய்யுடன் வரும் வாகனங்களுக்கு முறையான அனுமதி பெற வேண்டும், அவருடன் யார் யார் வருகிறார்கள் என்பது குறித்து காவல்துறைக்கு முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் பிரச்சாரம் நடத்த மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications