ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு வராரு.. 1 மாதத்தில் விஜய் செய்யப்போகும் செயல்.. ஆதவ் அர்ஜுனா சூசகம்
சென்னை: ஒரு படத்திற்கு ரூ.300 கோடி ஊதியம் பெறும் விஜய், தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருவதாக அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அதேபோல் இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் விஜய் வரப் போவதாகவும் கூறி இருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தவெக சார்பாக பொதுக்கூட்டங்கள் நடக்க தொடங்கி இருக்கும் நிலையில், ஆதவ் அர்ஜுனா மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் மட்டுமே பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி வருகின்றனர்.

ஜனநாயகன் பணிகள்
இதனால் தவெக தலைவர் விஜய் எப்போது களத்திற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், இன்னும் சில டப்பிங் பணிகள் மீதமிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பணிகளை முடித்து கொடுத்த பின் விஜய் களத்திற்கு வரவுள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
விஜய் சுற்றுப்பயணம்
இந்த நிலையில் இன்று காலை விஜயின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து தொடங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் இருந்து விஜய் தொடங்கப் போவதாகவும், முதற்கட்டமாக 100 இடங்களில் மக்களை சந்திக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் விஜயின் சுற்றுப்பயணம் தொடர்பாக மார்ச் மாதமே அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.
கல்லூரி நிகழ்ச்சி
ஆனால் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக தவெக தரப்பில் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் விஜயின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கப் போவதாக அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தனியார் கல்லூரி விழாவில் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.
ஆதவ் அர்ஜுனா பேச்சு
அப்போது மாணவர்கள் தரப்பில் விஜயின் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆதவ் அர்ஜுனா, ஒரு படத்திற்கு ரூ.200 முதல் ரூ.300 கோடி வரை விஜய் சம்பாதித்து வருகிறார். எல்லோரும் ஆட்சிக்கு வந்த பின் ஏதேதோ செய்து வருகிறார்கள். ரூ.10 லட்சம் ஊதியம், அமெரிக்காவில் வேலை.. இன்னொரு பக்கம் அரசியலில் செயல்பட ஆர்வம் இருக்கிறது.. நீங்கள் என்ன தேர்வு செய்வீர்கள்.. யாராக இருந்தாலும் வேலையை தான் தேர்வு செய்வோம்.
ரூ.300 கோடி சம்பளம்
அரசியலில் உள்ளவர்கள் சொத்து சேர்க்க வேண்டும், ஊழல் செய்ய வேண்டும் என்று இருக்கிறார்கள். ஆனால் விஜய் ரூ.300 கோடி ஊதியத்தை தூக்கி போட்டுவிட்டு, எதற்காக அரசியலுக்கு வர வேண்டும்? நம்பர் 1ஆக இருக்கும் விஜய், தினமும் சண்டை போட்டு திட்டு வாங்குவதற்காக ஏன் வர வேண்டும்? எம்எல்ஏவுக்கு ரூ.2 லட்சம் சம்பளம் தான்.
ஒரு மாதத்தில் விஜய் பயணம்
அதனால் விஜய் அரசியலுக்கு வருவது மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் என்று தெரிவித்தார். அப்போது அங்கிருந்த மாணவர்கள் விஜய் உடன் வீடியோ காலில் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு ஆதவ் அர்ஜுனா, இன்னும் ஒரு மாதத்தில் தமிழ்நாடு முழுக்க விஜயை வீடியோ எடுத்து கொண்டிருப்பீர்கள். சீக்கிரமாக உங்கள் அனைவரின் மாவட்டங்களுக்கும் விஜய் வருவார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications