தீபாவளி வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்! “நல்விடியல் பிறக்கட்டும்” அந்த வார்த்தைதான் மேட்டரே!
சென்னை: தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். "தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும்.. அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்." எனத் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார். அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற்றது. அதில் கட்சி கொள்கைகளையும், செயல் திட்டங்களையும் அறிவித்துள்ளார் விஜய். இந்த மாநாட்டில் பேசிய விஜய், பிளவுவாத அரசியல்வாதிகள் தமது சித்தாந்த எதிரி என்றும், திராவிட மாடல் என்று சொல்லி ஊழல் செய்யும் சுயநல குடும்பம் தனது அரசியல் எதிரி என்றும் அறிவித்தார் விஜய்.

இந்நிலையில், தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். "தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும். அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பு, அமைதி, செல்வம் நிலைத்து நீடித்திருக்கட்டும். தீப ஒளித் திருநாளைப் பாதுகாப்பாகக் கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்." எனத் தெரிவித்துள்ளார் விஜய்.
தீபாவளிப் பண்டிகையின் போது அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால், திமுக தலைமை சார்பில் இதுவரை தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லப்பட்டது இல்லை. இதனால் திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர் ஸ்டாலின், இந்துக்களை மட்டும் வெறுப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கட்சித் தலைவராக இல்லாமல் முதல்வராக மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை தீபாவளி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டதில்லை.

இந்நிலையில், அண்மையில் விநாயகர் சதுர்த்தியின்போது விஜய் வாழ்த்து தெரிவிக்காதது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி, தமிழ் புத்தாண்டு ஆகியவற்றிற்கு விஜய் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் அவரை சரமாரியாக விமர்சித்தனர்.
ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறி இருந்தார் விஜய். கேரளாவின் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் விஜய், தமிழகத்தில் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? குறிப்பாக, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. இனிவரும் காலங்களிலாவது அனைத்துதரப்பு மக்களின் விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்தனர்.
அண்மையில் ஆயுத பூஜையை ஒட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார் விஜய். இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். இந்த வாழ்த்துச் செய்தியில் விஜய் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் கவனம் பெற்றுள்ளன.
திமுக, ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, திமுக ஆட்சி அமையட்டும் விடியல் பிறக்கட்டும் என்ற வாசகத்தை திமுகவினர் பயன்படுத்தினர். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு விடியல் ஆட்சி எனக் குறிப்பிட்டனர். மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்திற்கு “விடியல் பயணம்” என பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், புதிதாக அரசியலுக்கு வந்துள்ள விஜய், "காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும்" என தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications