ஆதவை கூட்டிட்டு வாங்க.. கோபத்தில் ஆர்டர் பேட்ட விஜய்.. வாசலுக்கே ஓடிய புஸ்ஸி ஆனந்த்
சென்னை: விசிகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்த ஆதவ் அர்ஜுனாவை கட்சியின் பொதுச்செயலாளர் வாசல் வரை சென்று அவரை கட்டியணைத்து வரவேற்றார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரவி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற தவெகவில் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் ஐ.டி.விங்க் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் இன்று இணைந்தனர். இதன்மூலம் விசிகவில் இருந்து விலகி இருந்த ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிமுகவில் செயல்பட்ட நிர்மல் குமார் ஆகியோர் விஜய் கட்சியில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்துள்ளனர்.

இதில் ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிர்மல் குமாருக்கு தவெகவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் 2 பேரும் ஒரே நாளில் தவெகவில் இணைந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பாகி வருகிறது. நிர்மல் குமார், ஏன் இந்த முடிவை எடுத்தார்? என்கிற கேள்வி அதிமுகவில் ரவுண்ட் கட்டிக்கொண்டிருக்கிறது. விஜய் கட்சியில் பல்வேறு அரசியல் பிரபலங்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அப்படிப்பட்ட சம்பவங்களே நடக்காமல் இருந்தது.
தற்போது, திடீரென்று அந்த சம்பவங்கள் நடக்கத் தொடங்கியதற்கு காரணம், இதுநாள் வரையில் பல தகவல்கள் விஜய்க்கு தெரியாமல் இருந்தது. தெரியப்படுத்தப்படாமலும் இருந்தது. இந்த சூழலில், சமீபத்தில் விஜய்க்கும், விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனாவுக்கும் பொதுவான நண்பர் ஒருவர் விஜய்யை சந்தித்தார்.
அந்த சந்திப்பில் தான், பொது வெளியில் த.வெ.க. பற்றி நடந்து கொண்டிருக்கும் பல விஷயங்களை அந்த நண்பர் விஜய்யிடம் விவரித்தார். அப்போதுதான் விஜய்க்கு தன்னை சுற்றி இருப்பவர்களே முக்கிய தகவல்களை நம்மிடம் மறைத்துள்ளனர் என்பது புரிய வந்திருக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தான் ஆதவ் அர்ஜூனாவை உடனே சந்திக்க வரவழைத்ததும், அவருடன் தேர்தல் பணிகள் தொடர்பாக அக்ரிமெண்ட் போட்டுக்கொள்ளப்பட்டதும் நடந்துள்ளது.
ஆதவ் அர்ஜுனாவிடம் அக்ரிமெண்ட் குறித்துப் பேசப்பட்ட போது, கட்சியில் இணைய வேண்டும் என அவரிடம் தனது விருப்பத்தை விஜய் வெளிப்படுத்தி உள்ளார். அதற்கு இப்போதைக்கு வேண்டாம் ; அக்ரிமெண்ட் முடியட்டும் என சொன்னார் ஆதவ். அக்ரிமெண்ட் சைன் ஆனதற்கு பிறகும் கட்சியில் இணையச் சொல்லி விஜய் வற்புறுத்துவது தொடர்ந்துள்ளது.
இந்த வற்புறுத்தல் நேற்று இரவு கூடுதலாகவே ஆதவ்வுக்கு இருந்ததாம். அப்போது, ''நிறைய பிரபலங்கள் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருந்திருக்கிறார்கள். அதனை மூடி மறைத்தவர்களுக்கு ஒருவித எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அதற்கு உங்களின் இணைப்பு அவசியமாக இருக்கும். அதனால் நீங்கள் சம்மதிக்க வேண்டும்'' என்று ஆதவ்விடம் விஜய் அழுத்தமாக வலியுறுத்தியதை அடுத்தே கட்சியில் இணைவதற்கு ஆதவ் சம்மதித்துள்ளார்.
மேலும் தனக்கு தகவல் தராமல் இருந்த புஸ்சி ஆனந்தை விஜய் கடிந்து கொண்டிருந்தாலும், அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார். அதனால்தான், இணைவதற்காக கட்சி அலுவலகத்துக்கு வந்த ஆதவ் அர்ஜுனாவை வரவேற்று அழைத்து வாருங்கள் என புஸ்சிக்கு விஜய் உத்தரவு போட்டாராம். அதன்படியே வரவேற்று அழைத்து வந்துள்ளார் புஸ்சி ஆனந்த் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications