அடுத்த விஜயகாந்த்..’28’ தேதி குறிச்சாச்சு! தவெக தலைவர் விஜய் போட்ட உத்தரவு! அந்த மனசு இருக்கே!
சென்னை: உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டுமென அக்கட்சியில் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைக்கு நம்பர்-1 நடிகராக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் விஜய் அரசியல் வருகைக்கு முன்னதாக தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அரசியல் கட்சி தொடங்கப் போவதை சூசகமாக அறிவித்தார்.

அரசியலுக்கு ஏனோதானோ என்று வரக்கூடாது என தீர்க்கமாக இருந்த விஜய் தான் நற்பணி இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்து வந்தார். மாநில நிர்வாகிகள் நியமனம் மாவட்ட தலைவர்கள் நியமனம் என மெதுவாகவும் அதே நேரத்தில் நிதானமாகவும் அவரது செயல்பாடுகள் இருந்தது.
நடிகர் விஜய்: பனையூரில் அடிக்கடி ஆலோசனை, மாணவர்களுக்கு திட்ட உதவிகள் வழங்குவது என தொடர்ந்து திட்டமிட்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய் ஒரு வழியாக கட்சி பெயரையும் அறிவித்தார். 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கியுள்ளார். இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ளார்.
தி கோட்: இப்போது கோட் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் விஜய் தனது அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்த இரு திரைப்படங்களும் முடிவடைந்த பின்னர் தான் அவரது முழு அரசியல் பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் கடந்த ஆண்டு போலவே மாணவர்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு பரிசு வழங்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார்.
நிர்வாகிகள் ஏற்பாடு: இதை அடுத்து தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பிரியாணி விருந்து உடன் பரிசு வழங்க திட்டமிட்டு இருக்கிறார் நடிகர் விஜய். இதற்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏற்கனவே செய்து வருகின்றனர். விரைவில் அந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கும் நிலையில், மக்களுக்காக மற்றொரு புதிய அறிவிப்பை கட்சியினருக்கு கொடுத்துள்ளார் விஜய்.

அன்னதானம்: இந்நிலையில் உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டுமென அக்கட்சியில் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.
நிர்வாகிகள் உற்சாகம்: வருகிற 28.05.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மாவட்டம், அணி, நகரம், ஒன்றியம், கிளை, மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டு விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications