தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் நீக்கம்.. மகளிர் அணி நிர்வாகி வீட்டில் நுழைந்ததால் நடவடிக்கை!
சென்னை: தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அதிரடி நீக்கப்பட்டுள்ளார். மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார் எழுந்த நிலையில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வசிக்கும் ஜே.ஜே. செந்தில்நாதன் என்பவர் நீண்ட காலமாக விஜய் ரசிகர் மன்றத்திற்கு தலைவராக இருந்த நிலையில், விஜய் கடந்த ஆண்டு தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.

செந்தில்நாதன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக மகளிர் அணி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார் எழுந்தது. கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள பெண் நிர்வாகி ஒருவரது வீட்டிக்குள் நள்ளிரவு நேரத்தில் சென்று கதவை பூட்டியதாகவும், இதுகுறித்து அறிந்த பெண்ணின் உறவினர்கள், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையில், அந்தப் பெண்ணுடன் தவெக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து செந்தில் நாதனை தாக்கிய பெண்ணின் உறவினர்கள், அவரை அடுத்த நாள் காலையில் தான் விடுவித்துள்ளனர். இந்த விவகாரம் தவெக கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில், தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்,
மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அதிரடி நீக்கப்பட்டுள்ளார். மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார் எழுந்த நிலையில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் நடவடிக்கை எடுத்துள்ளார். தவெகவில் மாவட்ட செயலாளர் ஒருவர், பாலியல் விவகாரத்தில் சிக்கி பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications