'கில்லி’யை விட தவெக பாட்டு சுமார்தான்! விஜய் அரசியல் என்ட்ரி பற்றி சிங்கை கிண்டல்
சென்னை: விஜய் அரசியல் பிரவேசம் பற்றியும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது பற்றியும் அதிமுகவைச் சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன் சில கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்துள்ளார்.
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் களம் கண்டவர் சிங்கை ராமச்சந்திரன். இவருக்கும் அண்ணாமலைக்கும்தான் பிரச்சார களத்தில் சரியான போட்டி நிலவியது. இவர் அகமதாபாத் ஐஐஎம்-ல் படித்தவர். அண்ணாமலை லக்னோ ஐஐஎம்-ல் படித்தவர். அதனால் இந்த இருவரும் அதிகம் பேசப்பட்டனர். கடைசியில் திமுகவுக்கு ஆதரவாக வீசிய அலையில் இந்த இரண்டு பேரும் காணாமல் போனார்கள்.

சிங்கை ராமச்சந்திரன் ஜெயலலிதாவால் அதிமுக ஐடி விங் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி வந்தபிறகு அதே பதவியில் தொடர்கிறார். இவரது தந்தை எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவிலிருந்தவர். வட்ட செயலாளராக இருந்த இவர் முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது கோட்டைக்கு வந்து பொதுமக்களுடன் ஒருவராக நின்று, 'தலைவரே நீங்க என் கல்யாணத்துக்கு வந்தால்தான் நான் கல்யாணமே பண்ணிக் கொள்வேன்' என்று சவுண்ட் விட அதைக் கேட்ட எம்ஜிஆர் இவரது திருமணத்தைத் தலைமையேற்று நடத்திவைத்தார்.
அவருக்குப் பின்னர் இப்போது அதே அதிமுகவில் சிங்கை ராமச்சந்திரன் தொடர்ந்து வருகிறார். அவர் விஜய் வருகை பற்றியும், அதிமுகவின் அவர் ஜெயலலிதாவால் எப்படித் தேர்வானேன் என்பது பற்றியும் மனம் திறந்து பேசி உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், "எனக்கு 10 வயது இருக்கும்போது அப்பா மறைந்துவிட்டார். அப்பா இறக்கும்வரை அவரைப் பற்றியும் அவரது அரசியல் வாழ்க்கை பற்றியும் அதிகம் தெரியாது. பிறகுதான் அவரைப் பற்றி ஊர்மக்கள் சொல்லச் சொல்ல வியப்பாக இருந்தது. அவர்தான் என் ரியல் ஹீரோ. அவரைப்போலவே வரவேண்டும் என விரும்பினேன். ஊருக்கு அரசியல் வருவதன் மூலம் நல்லது செய்ய முடியும் என்று நம்பினேன். அதனால்தான் அதிமுகவில் 18 வயதில் சேர்ந்தேன்.

ஆனாலும் ஜெயலலிதாவுடன் நேரடி அறிமுகம் கிடைக்கவில்லை. அதன்பின்னர் ஐஐஎம் அகமதாபாத்தில் படித்துவிட்டு, அந்த அடையாளத்தை வைத்து அரசியலில் ஜெயிக்கலாம் என்பதற்காகவே படிக்கப்போனேன். அரசியலுக்காகத் தான் ஐஐஎம் போனேன். அங்கே படித்துவிட்டு அரசியலுக்கு நான் வரவில்லை. 2010இல் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தபோது டீ பிரேக்கில் ஒருவர் 'நீ ஐஐம் அகமதாபாத்தில் படித்துவிட்டு அதிமுகவுக்காக உழைக்கிறேன் என்பதை தெரியப்படுத்தும்படி ஒரு பேட்டி கொடு. அது ஒருவேளை ஜெயலலிதாவைப் போய்ச் சேரலாம்' என்று ஐடியா கொடுத்தார். அதேபோல செய்தேன். அது ரீச் ஆகவில்லை.
ஒருமுறை தற்செயலாக ஒரு ஆங்கில பத்திரிகை நண்பர் என்னைப் பற்றி விசாரித்தார். அவருக்கு நான் ஐஐஎம் அகமதாபாத்தில் படித்துவிட்டு வேலையைவிட்டுவிட்டு அரசியல் ஈடுபட இருக்கிறேன் எனச் சொன்னதும் ஆச்சரியப்பட்டுப் போய் எழுதினார். அது பல ஊடகங்களில் வந்தது. அந்தச் செய்திகளை எல்லாம் கத்தரித்து 2015 போயஸ்கார்டன் போய் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.

சரியாக 6 மாதங்கள் கழித்து டிவியில் அதிமுக ஐடி விங் பொறுப்பாளராக ஜெயலலிதா என்னை அறிவித்தார். அப்போது நான் சினிமா தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்தேன். என் அம்மாதான் போன் போட்டு சொன்னார். அப்படித் தொடங்கியதுதான் அரசியல் வாழ்க்கை. சின்ன வயதிலிருந்தே ஜெயலலிதாவை நேரில் பார்க்க வேண்டும் என்பதுதான் என் கனவு. இந்தப் பதவிக் கிடைத்தபோது அவரை நேரில் சந்தித்தேன்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் விஜய் அரசியல் கட்சி பிரவேசம் பற்றி, "யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அவர் கட்சி தொடங்கி இருக்கிறார். அவரை நான் வரவேற்கிறேன். கூடவே வாழ்த்தையும் தெரித்துக் கொள்கிறேன். இப்போதைக்கு இதைத்தான் என்னால் சொல்ல முடியும். ஏனென்றால் அவரது இலட்சியம் என்ன? கொள்கை என்ன? அவர் திட்டங்கள் என்ன? அவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என எதைப் பற்றியும் அவர் தெளிவாகச் சொல்லவே இல்லை.
அவர் நிறையப் பத்திரிகையாளர்களைச் சந்திக்க வேண்டும். அவரது திட்டங்கள் பற்றிப் பேசி விளக்க வேண்டும். அவரது கொள்கை விளக்கப் பாடலைக் கேட்டேன். அதன் காட்சிகளைக் கொஞ்சம் இன்னும் சிறப்பாகச் செய்து இருக்கலாம். 'கில்லி' படத்தில் வரும் பாட்டைவிட சுமாராகத்தான் இருந்தது. எனக்குக் கில்லி படத்தின் பாட்டுகள் அதிகம் பிடிக்கும். அதோடு ஒப்பிட்டால் இது சுமார்தான்" என்கிறார்.
அதேபோல் துணை முதல்வர் பதவிக்கு உதயநிதி வரலாமா என்பதற்கு விளக்கம் அளித்த அவர், "அரசியல் என்பதைச் சின்ன வயதிலிருந்தே அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவர் உதயநிதி. அவருக்கு என்னைவிட மக்களைவிட ஆட்சி அதிகாரம் பற்றி எலலம் அதிகம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அவர் பேசுவதைப் பார்க்கும்போது அதற்கான அறிகுறி இல்லை, அவர் ஆவரேஜ் ஆகத்தான் தெரிகிறார். எனவே அவரை துணை முதல்வராக உடனடியாக கொண்டுவருவது சரியல்ல" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications