முடிவுக்கு வந்த சனிக்கிழமை செண்டிமெண்ட்.. ஒருவழியாக ரூட்டை மாற்றிய விஜய்.. தவெகவின் மாஸ்டர் பிளான்!
சென்னை: தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை செண்டிமெண்டில் இருந்து வெளி வந்திருக்கிறார். கரூர் விவகாரத்திற்கு பின் விஜய்யின் பிரச்சாரம் 2 மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறையிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே திருச்சியில் இருந்து தனி விமானம் மூலமாக சென்னை வந்த விஜய், 3 நாட்களுக்கு பின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதன்பின் ஒரு மாதமாக வெளியில் வராத விஜய், கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து சந்தித்தார்.

அதன்பின் தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டிய விஜய், உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களை முன் வைத்து முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தார். அதன்பின் விஜய் SIR தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டார். கரூர் சம்பவத்திற்கு பின் விஜய்யும், தவெகவும் பெரிய அளவில் எந்த அரசியல் செயல்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை.
2 நாட்களுக்கு முன்பாக SIRக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தினர். ஆனால் SIR பணிகளில் கூட தவெகவினர் ஈடுபடவில்லை. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 4ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தவெக தயார் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தவெகவின் சேலம் மாவட்டச் செயலாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜய் சுற்றுப்பயணத்திற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி மனு அளித்தார். அதன்படி சேலம் மாவட்டத்தில் போஸ் வளாகம், கோட்டை வளாகம் உள்ளிட்ட இடங்களில் ஒன்றில் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தவெகவின் மனுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
டிசம்பர் 4ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். அதேபோல் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு நாள் என்பதால், மாற்று தேதியை முடிவு செய்து கொடுக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே கடந்த முறை விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்கிய போது, சனிக்கிழமைகளில் மட்டுமே மக்களை சந்தித்து வந்தார்.
ஆனால் இம்முறை டிசம்பர் 4ஆம் தேதி வியாழக்கிழமையன்று விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க முடிவு எடுத்திருக்கிறார். இதனால் விஜய் சனிக்கிழமை செண்டிமெண்டில் இருந்து வெளி வந்திருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் விஜய் ஏற்கனவே ஜோசியரின் பேச்சைக் கேட்டு செயல்பட்டு வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது கார்த்திகை தீபத் திருநாளன்று பிரச்சாரத்தை தொடங்க முடிவு எடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications