ஸ்டாலின் ஸ்டைலில் சாட்டையை சுழற்றுவாரா விஜய்.. கண் முன் இருக்கும் 2 ஆப்ஷன்கள்.. என்ன நடக்கும்?
சென்னை: தவெக அரசின் பட்ஜெட் கூட்டம் அடுத்த வாரம் தொடங்கும் என சொல்ல ப்படுகிறது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால், பட்ஜெட் தாக்கலுக்கு முதல் நாள் கவர்னர் அர்லேக்கரின் உரையுடன் சட்டப்பேரவை கூடும். அப்போது தவெக ஆட்சியின் விஷன் குறித்து கவர்னரின் உரையில் இடம் பெறும்.
திமுக அரசு கஜானாவை காலி செய்துவிட்டுப் போயிருப்பதாகவும், என்ன இருக்கிறது ? என்ன இல்லை ? என போய்ப்பார்த்தால் தெரியும் என்று பதவி ஏற்பில் கர்ஜித்தார் முதல்வர் விஜய். மேலும், திமுக ஆட்சி குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார் விஜய். இந்த கர்ஜனை பொதுவெளியில் மிக பரபரப்பை ஏற்படுத்திய அதேசமயம், கஜானாவைப் பார்க்காமலே, அது காலியாக இருப்பதாக எப்படிச் சொல்கிறீர்கள்? என்கிற விமர்சனங்களும் வெளிப்பட்டன.

இந்த நிலையில், நடப்பு நிதிஆண்டிற்கான பொது பட்ஜெட்டை இந்த மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன. கடந்த திமுக ஆட்சியில் நடப்பு நிதியாண்டிற்காக இடைக்கால பட்ஜெட்டைத்தாக்கல் செய்திருந்தது.
கடந்த திமுக ஆட்சியின் போது நடப்பு நிதியாண்டிற்காக இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்திருந்தது. தேர்தல் காலம் என்பதால் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். அந்த வகையில் இடைக்கால பட்ஜெட் தாக்கலானது.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விஜய் முதலமைச்சராகியுள்ள நிலையில், பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும், துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை யெனில், ஜூன் மாதம் முதல் அரசு செலவினங்களுக்கு, அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு, செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்படும்.
பட்ஜெட் கவர்னர் உரை
பட்ஜெட்டில் பொதுவாக, கவர்னர் உரை என்பது அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையை அப்படியே வாசிப்பதுதான் மரபு. ஆனால், கடந்த திமுக ஆட்சியில் அரசின் உரையை அப்படியே வாசிக்காமல் பலவற்றை திருத்தியும் சேர்த்தும் வாசித்தார் அப்போதைய கவர்னர் ரவி.
இதனால், பேரவையில் ஆளும் கட்சிக் கும் கவர்னருக்கும் எப்போதும் முட்டல் மோதலே இருந்து வந்தது. பேரவையில் இருந்து ரவி வெளிநடப்பு செய்த சம்பவமும் கூட நடந்தது. அப்படிப்பட்ட நிலையில், தற்போதைய கவர்னர் அர்லேக்கர், தவெக அரசு தயாரித்து தரும் உரையை அப்படியே வாசிப்பாரா? இல்லை, முந்தைய கவர்னர் ரவியின் பாணியை பின்பற்றி உரையை திருத்தி தனது விருப்பத்திற்கேற்ப வாசிப் பாரா? என்கிற கேள்வி இப்போதே பேரவை வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.
முதலமைச்சாராக விஜய் பதவி ஏற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது சர்ச்சையானது. இதனை அடுத்து , இனி அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி தந்திருக்கிறார். அந்த வகையில், கவர்னரின் உரையின் போது , வாந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்படாமல் தவிர்க்கப்பட்டாலோ அல்லது பேரவையின் முடிவில் பாடப்படும் என முடிவு செய்யப்பாட்டாலோ அதனை எப்படி கவர்னர் அர்லேக்கர் எடுத்துக் கொள்வார் ? என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
இந்த நிலையில், கவர்னரின் உரையில் இடம்பெற வேண்டிய விசயங்கள் குறித்தும் கோட்டையில் அதிகாரிகளிடம் விவாதித்திருக்கிறார் முதல்வர் விஜய். மேலும், வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்படும் விவகாரம் குறித்து கவர்னரின் மனநிலையை அறிந்துக் கொள்ளவும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாராம் விஜய். மீண்டும் பேரவை கூடும் போது சர்ச்சைகள் வெடிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு பேரவை அலுவலர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications