புஸ்ஸி ஆனந்த் vs ஆதவ் அர்ஜுனா.. 2ம் இடத்திற்காக நடக்கும் உச்சக்கட்ட மோதல்.. தவெகவில் என்ன நடக்கிறது?
சென்னை: தவெக தலைவர் விஜய்யுடன் நெருக்கமாக உள்ள புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். சோசியல் மீடியாவில் புஸ்ஸி ஆனந்த்-க்கு எதிரான தகவல்களை ஆதவ் அர்ஜுனாவின் வார் ரூம் தரப்பே கசியவிடுவதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பின் கடந்த 25 நாட்களாக தவெக தலைவர் விஜய் மவுனம் காத்து வரும் நிலையில், அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள்.. ஏன் மாவட்டச் செயலாளர்கள் கூட என்ன செய்வதென தெரியாமல் தடுமாற்றம் அடைந்துள்ளனர்.

அதேபோல் கட்சித் தொடங்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும், இதுநாள் வரை கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கூட விஜய் முழுமையாக உருவாக்கவில்லை. 120 மாவட்டச் செயலாளர்கள் என்று அறிவித்துவிட்ட நிலையில், இதுநாள் வரை மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு ஒரு நிர்வாகியை கூட நியமனம் செய்யவில்லை.
விஜய் ரசிகர்களாக இருந்த பலரும், தவெகவின் தொண்டர்களாக மாறிவிட்ட நிலையில், அவர்களை அரசியல்படுத்த வேண்டிய விஜய் பொறுப்புகளை தனக்கு நம்பிக்கையானவர்களிடம் விட்டுச் சென்றுவிட்டார். ஆனால் நம்பிக்கையானவராக கருதப்பட்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழக்கிற்கு பயந்து தலைமறைவாகியது அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் கரூர் சம்பவத்திற்கு பின் தவெக தலைவர் விஜய் உடன் இருக்கும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் உள்ளிட்டோருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. விசிகவில் இருந்த காலம் தொடங்கியே ஆதவ் அர்ஜுனா வாய்ஸ் ஆஃப் காமன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். விவரம் அறிந்தவர்கள் அதனை ஆதவ் அர்ஜுனாவின் வார் ரூம் என்று சொல்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் தவெக ஐடி விங்கிற்கான பணிகளையும் ஆதவ் அர்ஜுனாவே மேற்கொண்டார். தற்போது கரூர் விவகாரத்திற்கு பின் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியில் விவரம் அறிந்த சிலர் கூறுகின்றனர். சோசியல் மீடியாவில் புஸ்ஸி ஆனந்த்-க்கு எதிரான தகவல்களையும், பதிவுகளையும் ஆதவ் அர்ஜுனா தரப்பு செய்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கு தவெக நிர்வாகிகள் மத்தியில் புஸ்ஸி ஆனந்த்-க்கு இருக்கும் ஆதரவும், அவர்கள் மத்தியில் புஸ்ஸி ஆனந்த்-க்கு இருக்கும் செல்வாக்குமே காரணமாக பார்க்கப்படுகிறது. தவெக தொடங்கிய போது புஸ்ஸி ஆனந்த் மீது கட்சிப் பதவிக்கு பணம் வாங்கிக் கொண்டு நியமனம் செய்யப்படுகிறார் என்று வெளியான செய்திகளுக்கும் இதுவே காரணம் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல் மற்ற கட்சியில் அதிருப்தியில் இருக்கும் முக்கியமான நிர்வாகிகள் தவெகவில் இணைய சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதற்காக ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரை தொடர்பு கொண்ட போது கடைசி வரை இழுத்ததடித்து இருக்கின்றனர். விஜய் அருகில் தங்களை தவிர வேறு யாரும் நெருங்கிவிட கூடாது என்பதில் இருவருமே தெளிவாக இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது அந்த இருவருக்கும் இடையில் மோதல் எழுந்திருப்பது தெரிகிறது. ஏற்கனவே விஜய்யின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. தற்போது புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு 6 மாதமே உள்ள நிலையில், தவெக தலைமை நிர்வாகிகள் மோதிக் கொண்டிருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications