இது மட்டும் நடந்தால்.. விஜய் வாக்கு வங்கி 20% தாண்டும்! ஜெயலலிதா வாக்கு வங்கியில்.. கை வைக்கும் தவெக
சென்னை: அதிமுகவின் அதிருப்தி வேட்பாளர்களை ஈர்த்து, விஜய் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டால், அக்கட்சியின் கூட்டணி வாக்கு சதவீதம் நிச்சயம் 20%ஐத் தாண்டும் என அரசியல் விமர்சகர் மற்றும் ஆய்வாளர் வம்சி சந்திரன் உறுதியாகக் கூறுகிறார்.
அதிமுக இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில் விரைவில் இன்னும் மிகப்பெரிய தலைவர் ஒருவர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக தரப்பில் விசாரித்ததில் செங்கோட்டையன் தவெக போனது வெறும் டீசர்தான் என்கிறார்கள். மெயின் பிக்சர் இனிதான் என்கிறார்கள். அதிமுகவில் உள்ள 10 முக்கியமான தலைகளிடம் செங்கோட்டையன் பேசி வருகிறாராம். அதில் டாப் தலைவர் ஒருவர் விரைவில் தவெக செல்லலாம் என்று கூறப்படுகிறது. மாஜி அமைச்சர்கள், சில மூத்த எம்எல்ஏக்கள், எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் தலைகள் பலரிடமும் செங்கோட்டையன் தீவிரமாக பேசி வருகிறாராம்.
அரசியல் ஆய்வாளர் வம்சி சந்திரன் கணிப்பு
இப்படிப்பட்ட நிலையில்தான் அரசியல் ஆய்வாளர் வம்சி சந்திரன், தமிழக வெற்றி கழகத்தின் எதிர்கால வாக்கு சதவீதம் குறித்த தனது முதல் கணிப்பை வெளியிட்டுள்ளார், தென்-மத்திய தமிழ்நாட்டில் தான் மேற்கொண்ட சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிட்டால், குறைந்தபட்சம் 8% வாக்குகளைப் பெறும் என அவர் மதிப்பிட்டுள்ளார். ஒருவேளை தென் - மத்திய தமிழ்நாட்டில் விஜய் எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை என்றால், தமிழக வெற்றி கழகத்தின் வாக்கு சதவீதம் 6%ஐ விட குறைவாகவே இருக்கும் என்று கூறி உள்ளார்.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தமிழக வெற்றி கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் (பமக) ஒரு பிரிவினருடன் கூட்டணி அமைத்து, செங்கோட்டையன் அதிமுகவின் அதிருப்தி வேட்பாளர்களை ஈர்த்து, விஜய் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டால், அக்கட்சியின் கூட்டணி வாக்கு சதவீதம் நிச்சயம் 20%ஐத் தாண்டும் என வம்சி சந்திரன் உறுதியாகக் கூறுகிறார்.
தலித் வாக்குகள் விஜய் பக்கம்
முன்னதாக, தலித் இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு அதிக ஆதரவு காணப்பட்டதால், தமிழக வெற்றி கழகம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலித் மற்றும் சிறுபான்மை வாக்குகளைப் பிரிக்கும் என்பதே தனது முதல் எண்ணமாக இருந்தது என வம்சி சந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த இரண்டு மாதங்களாக ஜெயலலிதாவின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) வாக்குகளை விஜய் கவரத் தொடங்கியுள்ளதை தான் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். செங்கோட்டையன் (கவுண்டர் சமுதாயம்) தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த பிறகு, டிடிவி தினகரன் (கள்ளர் சமுதாயம்) மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு பிரிவினர் (வன்னியர் சமுதாயம்) தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி சேரும்பட்சத்தில், ஒரு வலுவான ஓபிசி வாக்குச் சமன்பாடு களத்தில் உருவாகும். ஜெயலலிதாவுக்கு 40% வாக்குகள் பெற்றுத் தந்த மூன்று சமூக வாக்குகளும் விஜய்க்கு ஓரளவு ஒருங்கிணைக்கப்படலாம் என வம்சி சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அனைத்துக் கணிப்புகளும், சாத்தியக்கூறுகளும் நடிகர் விஜய் தனது பிரச்சாரத்தை எந்த அளவுக்குத் தீவிரமாகவும், வியூகபூர்வமாகவும் முன்னெடுக்கிறார் என்பதைப் பொறுத்தே அமையும். அவரது தலைமை மற்றும் களச் செயல்பாடு, இந்த கணிப்புகளை நிஜமாக்கும் சக்தி கொண்டது என வம்சி சந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications