போராட வாங்க.. தவெக அலுவலகத்திற்கு நேரில் சென்று அழைத்த பாமக நிர்வாகிகள்.. பனையூரில் நடந்த சம்பவம்!
சென்னை: பாமக சார்பில் டிசம்பர் 17ஆம் தேதி சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்புமணி சார்பில் அழைப்பு கடிதத்தை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் வழக்கறிஞர் பாலு மற்றும் பாமக கட்சியினர் வழங்கினர். இதனால் பாமக போராட்டத்தில் தவெக இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கும் திமுகவை கண்டித்தும் பாமக தரப்பில் டிசம்பர் 17ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்க திமுகவை தவிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் அன்புமணி கடிதம் எழுதி இருக்கிறார்.

இதுதொடர்பாக அன்புமணி எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் தேவையை தாங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். சமூகத்தின் நிலையை கண்டறிவதற்கான எக்ஸ்-ரே கருவிதான், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு 15 ஆண்டுகளாக அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து 1994 ஆம் ஆண்டில் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் 2010 ஜூலை 13 ஆம் தேதியில் தீர்ப்பளித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான அமர்வு, ''69% இட ஒதுக்கீடு செல்லும். அதேநேரத்தில் ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும்'' என்று ஆணையிட்டது.
ஆனால் அப்போதிருந்த தமிழக அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து, சிலர் 2012 ஆம் ஆண்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு எந்த நேரமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படக் கூடும். அப்போது தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இட ஒதுக்கீடுப் பிரிவினரின் மக்கள்தொகை 69%க்கும் கூடுதலாக இருப்பதை நிரூபிக்காவிட்டால், 69% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் வாய்ப்புள்ளது.
எனவே, 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவாவது உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீட்டின் பயன்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கு காரணம், சமமற்றவர்கள் சமமானவர்களாக ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பதுதான்.
இந்த நிலையை மாற்றி, அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீட்டின் பயன்கள் முழுமையாக கிடைக்க ஒரே தீர்வு உள் இட ஒதுக்கீடு வழங்குவதுதான். அதற்கு அடிப்படைத் தேவை சாதிவாரி சர்வே நடத்துவதுதான். தமிழ்நாட்டிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதற்கு சாதிவாரி சர்வே கட்டாயத் தேவை ஆகும்.
அதை நடத்துவதற்கு சட்டப்படியான எந்தத் தடையும் தமிழக அரசுக்கு இல்லை. சாதிவாரி சர்வேயை நடத்துவதற்குத் தேவையான நிதியும், மனிதவளமும் தமிழக அரசிடம் தாராளமாக உள்ளது. தமிழக அரசு நினைத்தால் ஒரு மாதத்தில் சாதிவாரி சர்வே நடத்த முடியும். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மறுத்து வரும் திமுக அரசைக் கண்டித்தும், உடனடியாக சாதிவாரி சர்வே நடத்த வலியுறுத்தியும் சென்னையில் டிசம்பர் 17 ஆம் நாள் தொடர் முழக்கப் போராட்டம் நடத்த பாமக முடிவு செய்திருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களை சமூக, கல்வி, பொருளாதார நிலையில் மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். எனவே, இந்தப் போராட்டத்தில் சமூகநீதியில் அக்கறை கொண்ட தாங்களும் பங்கேற்று தமிழகத்தில் சமூகநீதியை பாதுகாக்க ஆதரவளிக்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் வழக்கறிஞர் பாலு நேரில் சென்று கொடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடிதத்தை பெற்றுக் கொண்டார். இதனால் பாமகவின் போராட்டத்தில் தவெக பங்கேற்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications