SIR விவகாரம்.. 16 நாட்களுக்கு பின் களமிறங்கிய தவெக.. தொகுதி வாரியாக குழு அமைத்த விஜய்!
சென்னை: SIR தொடர்பான வழிகாட்டுதல்களை தவெக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வழங்கி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் SIR தொடர்பாக மக்களுக்கு உதவுவதற்கு சட்டசபைத் தொகுதி வாரியாக 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, கட்சி நிர்வாகிகள் முறையாக பணியாற்றவில்லை என்றால் புகார் அளிக்க உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
SIR விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக பல்வேறு கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் திமுகவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் பிஎல்ஓ-க்களுடன் சென்று மக்களுக்கு முறையாக படிவங்களை வழங்கி அதனை நிரப்பவும் உதவி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆங்காங்கே அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளும் இப்படியான பணிகளை மேற்கொண்டிருந்தாலும், பெருவாரியாக திமுகவை தவிர்த்து வேறு கட்சி நிர்வாகிகள் களத்தில் செயல்படவில்லை. இந்த நிலையில் SIR பணிகள் தொடங்கி சுமார் 10 நாட்களுக்கு பின் தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட, அதன்பின் மாவட்ட ரீதியாக தவெக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனாலும் தவெக பூத் கமிட்டி நிர்வாகிகள் யாரும் களத்திற்கு வரவில்லை. SIR பணிகள் இன்னும் 13 நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், தவெகவின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் SIR தொடர்பான வழிகாட்டுதல்களை தவெக நிர்வாகிகளுக்கு வழங்கி இருக்கின்றனர்.
அதேபோல் SIR விவகாரத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்வதற்காக சட்டசபைத் தொகுதி வாரியாக 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கட்சி நிர்வாகிகள் முறையாக பணியாற்றவில்லை என்றால், உடனடியாக புகார் அளிக்க உதவி எண்களும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
திமுக மற்றும் அதிமுகவில் ஒரு பூத் கமிட்டிக்கு 9 பேர் என்ற கணக்கில் கூடுதலாகவே நிர்வாகிகள் SIR பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தவெக தரப்பில் பூத் வாரியாக அல்லாமல் சட்டசபைத் தொகுதி வாரியாக 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் கட்டமைப்பில் உள்ள பிரச்சனைகளை தெளிவாக வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications