விஜய்க்கு 34% மக்கள் ஆதரவு இருக்காம்.. ஆதவ் அர்ஜுனா ஸ்டைலில் பகீர் டேட்டாவுடன் வந்த செங்கோட்டையன்!
சென்னை: தவெக தரப்பில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 34 சதவிகிதம் பேர் ஆதரவாக இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தவெகவில் 1.28 கோடி பேர் உறுப்பினர்களாக இருப்பதாக கூறிய செங்கோட்டையன், வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே எங்கள் கட்சியில் உறுப்பினராக முடியும் என்றும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், தவெக கடந்த ஒரு மாதமாக எந்தவகையான அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை. கடைசியாக ஈரோடு மாவட்டத்தில் விஜய் பொதுக்கூட்டம் நடத்தி இருந்தார். இதன்பின் கிறிஸ்துமஸ் விழாவில் மட்டும் பங்கேற்ற விஜய், பின்னர் சிபிஐ விசாரணைக்கு 2 முறை ஆஜராகினார். இதனால் தவெக தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர்.

அண்மையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் மட்டும் கொங்கு பகுதிகளில் சில நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் செங்கோட்டையன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், 50 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட போது இரவு முழுவதும் கண்ணீர்விட்டு அழுதேன்.
அதன்பின் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்த பின், இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். தவெகவில் என்னை 5,6 பேர் அழைத்து பேசினார்கள். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பேசினார்கள். ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாய்யை விட்டுவிட்டு மக்கள் பணிக்காக விஜய் வந்துள்ளார். தவெகவில் இருக்கும் அனைவரும் இதே எண்ணத்துடன் இருக்கிறோம்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தான் ஆட்சி செய்து வருகிறது. தற்போது புதிய கட்சிக்கான தேவை வந்துள்ளது. இளைஞர்கள், பெண்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியவை இருந்தது. ஆனால் வெற்றி மீது வெற்றியை எம்ஜிஆர் பெற்றார். அதுபோல் திமுக, அதிமுக இருந்தாலும், விஜய் அரசியலுக்குள் வந்துள்ளார்.
மக்களுக்கு விஜய் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. தவெகவில் இணைய பல்வேறு தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள். அதற்கான கால, நேர, சூழலை எதிர்பார்த்து இருக்கிறார்கள். சிலர் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லி வருகின்றனர். அதுபோல் விரைவில் தவெகவை நோக்கி பலரும் வருவார்கள். யாரை நினைத்து கேட்கிறீர்களோ, அவர்கள் எல்லாம் நிச்சயம் வருவார்கள்.
ஒரு மாதமாக விஜய் எதுவும் பேசவில்லை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் 2 முறை டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஜனநாயகன் படம் ரிலீஸாகவில்லை. விரைவில் தேதி முடிவு செய்துவிட்டு பணிகளை தொடங்குவார். அதேபோல் தவெகவுக்கு 34 சதவிகித வாக்குகள் இருக்கிறது. எங்களின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
அதேபோல் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே எங்களின் கட்சியில் இணைய முடியும். மொத்தமாக தவெகவில் மட்டும் 1.28 கோடி பேர் தவெகவில் உறுப்பினர்களாக உள்ளனர். தவெகவில் இதற்கான டேட்டா இருக்கிறது. மற்ற கட்சிகளில் அப்படியல்ல. இது நிச்சயமாக வாக்குகளாக மாறும். அதுமட்டுமல்லாமல் இளைஞர்கள் பலரும் தவெகவில் உறுப்பினராகவில்லை. ஆனாலும் ஆதரவளிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
2 மாதங்களுக்கு முன் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், தவெகவுக்கு 28 சதவிகிதம் பேர் ஆதரவு இருக்கிறது என்று கூறி இருந்தார். இன்னும் 12 சதவிகிதம் இருந்தால், தவெக எளிதாக ஆட்சியை பிடிக்கும் என்று கூறி வந்தார். தற்போது செங்கோட்டையன் அதனை 6 சதவிகிதம் வரை உயர்த்தி 34 சதவிகிதம் என்று கூறி இருக்கிறார். SIR பணிகளில் தவெக பெரிதாக ஈடுபடாத சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் தங்கள் ஆதரவாளர்களின் வாக்குகள் காப்பாற்றி பணியாற்றினர். இதனால் செங்கோட்டையன் சொன்ன டேட்டா விவாதமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications