என்ன.. விஜய்க்கு பயமா.. நேரம் வரும் போது செய்தியாளர்களை சந்திப்பார்.. நண்பர் சஞ்சீவ் சொன்ன பதில்!
சென்னை: தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களை சந்திக்க பயம் இல்லை என்றும், சரியான நேரம் வரும் போது அனைவரையும் சந்திப்பார் என்றும் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் தெரிவித்துள்ளார். தவெக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி சுமார் 2 ஆண்டுகள் ஆகிவிட்ட சூழலிலும், விஜய் இதுவரை ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் 3 நாட்களுக்கு பின் வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் தார்மீக பொறுப்பேற்று வருத்தமோ, மன்னிப்போ கூட விஜய் கேட்கவில்லை. இதனால் விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரடியாக சென்று சந்திக்காமல் வீடியோ கால் மூலமாக பேசி இருக்கிறார். பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களில் 33 குடும்ப உறுப்பினர்களுடன் விஜய் பேசி ஆறுதல் கூறி இருக்கிறார். இதனால் விரைவில் விஜய் கரூர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகளையும் தவெக தொடங்கி இருக்கிறது.
இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் தவெக கடிதம் அளித்த நிலையில், டிஜிபி அலுவலகம் தரப்பில் கரூர் மாவட்ட எஸ்பியை அணுக அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் இன்னும் 2 வாரங்களில் விஜய் மீண்டும் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கரூர் சம்பவத்தின் போது திருச்சி விமான நிலையத்தில் விஜய் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி சுமார் 2 ஆண்டுகளாக உள்ள நிலையில், விஜய் இதுவரை ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை. ஊடகங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு கூட பொது மேடைகளிலேயே பதிலாக அளித்து வருகிறார். இதனால் செய்தியாளர்களை சந்திக்க விஜய்க்கு பயம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் சின்னத்திரை நடிகரும், விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நடிகர் சஞ்சீவிடம் செய்தியாளர்கள், தவெக தலைவர் விஜய்க்கு செய்தியாளர்களை சந்திக்க தைரியம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகர் சஞ்சீவ், என்ன பயம்.. சரியான நேரம் வரும் போது செய்தியாளர்களை சந்திப்பார் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக விஜய் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்குவதாக அறிவித்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் ரஜினிக்கு ஊடகங்களை கையாள தெரியவில்லை என்றும் விமர்சனங்கள் அதிகரித்து, அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டிய சூழல் உருவாகியது. அதனால் விஜய் செய்தியாளர்களை எப்படி அணுகுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications