விஜய் பாதுகாப்பில் அலட்சியம்.. கரூர் துயரத்திற்கு தமிழக அரசை குற்றம்சாட்டி தவெக தீர்மானம்!
சென்னை: தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு வேண்டுமென்றே திமுகவின் அழுத்தம் காரணமாக காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதில்லை என்று தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விஜய் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பில் வேண்டுமென்றே அலட்சியம் காட்டுவதாகவும், தமிழக அரசின் இந்த பாகுபாடான செயல்பாட்டை கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பின் சைலண்ட் மோடில் இருந்த தவெக, தற்போது அரசியல் செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தவெகவின் அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இந்த பொதுக்குழுவில் தவெக சார்பாக 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 8வதாக இயற்றப்பட்ட தீர்மானத்தில், மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய்க்கும், அவரைக் காண வரும் பொதுமக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு, முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தாய்த் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில், ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒற்றை நம்பிக்கையாக இருக்கக்கூடிய தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ளும் போது நிகழ்ச்சிகளுக்கு வேண்டுமென்றே ஆளும் திமுக அரசின் அழுத்தத்தால், அரசு இயந்திரம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதில்லை. விஜய்க்கு பின்னால் நம்பிக்கையோடு அணி திரளும் மக்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் செய்வதில்லை.
கரூரில் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், நாம் குறிப்பிடும் குற்றச்சாட்டுகளுக்குக் கண் முன் சாட்சிகளாக இப்போதும் இருக்கின்றன. நம் பயணத்தைத் தடுக்க முட்டுக்கட்டை போடும் விதிமுறைகள், நம் குரலை ஒடுக்கத் தேவையற்ற விதிமுறைகள், அலைக்கழிப்புகள் என்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசாங்கமும், அரசு இயந்திரமும், விஜய்பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் வேண்டுமென்றே அலட்சியமாக அஜாக்கிரதையாக செயல்படுகின்றன.
ஒருதலைப்பட்சமான அரசாங்கத்தின் இந்தப் பாகுபாட்டையும். அரசு இயந்திரத்தின் அலட்சியத்தையும் தமிழக வெற்றிக் கழகத்தின் இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. எதிர்காலத்தில் இந்தக் குறைபாடுகளைக் களைந்து, விஜய் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தில் தமிழக அரசு தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுமக்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்று நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது. விஜய் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பில் வேண்டுமென்றே அலட்சியம் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளது. இதனால் கரூர் விவகாரத்தில் தவெக அரசியல் செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications