ஸ்டார் பவரை இழக்க விரும்பாத விஜய்.. வீக் எண்ட் பாலிடிக்ஸ்க்கு பின்னணியில் இப்படியொரு காரணமா!
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ்க்ளூசிவிட்டியை இழக்க விரும்பவில்லை என்று பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக ஒரே நாளில் 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த முடிவு எடுத்துள்ளதாக, பிப்ரவரி மாதத்தின் போது நேராக மக்களை சந்தித்து பேசும் போது, அதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும் என்று விஜய் கருதுவதாகவும் கூறப்படுகிறது.
2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே மதுரையில் நடத்திய 2வது மாநில மாநாடு அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது மாவட்ட ரீதியாக விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு ஏற்கனவே தவெக தலைமை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தொடங்கும் இந்த சுற்றுப்பயணம், டிசம்பர் 20ஆம் தேதி மதுரையில் நிறைவடைகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று விஜய் 3 மூன்று மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். விஜய்யின் சனிக்கிழமை செண்டிமெண்டிற்கு பின் பல்வேறு அரசியல் கணக்குகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
தவெகவில் இருக்கும் நிர்வாகிகள் மக்களுக்கு பரீட்சையமான ஒரு முகம் என்றால் அது விஜய் மட்டும்தான். 2ஆம் கட்டத் தலைவர்களாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்டோர் மக்களிடையே அறிமுகம் இல்லாத தலைவர்கள் தான். இதனால் விஜய் மட்டுமே முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதில் தவெகவும் தெளிவாகவே இருக்கிறது.
அதேபோல் தேர்தலுக்கு முன்பாக விஜய் தனது எக்ஸ்க்ளூசிவிட்டியை இழக்க விரும்பவில்லை. ஏனென்றால் விஜய் மக்களுக்கு அருகில் சென்று பேசும்போது, அவர்களுக்கு மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். அதனை தேர்தல் காலத்தில் செய்தால் சரியாக இருக்கும் என்று விஜய் கருதுகிறார். இதனால் ஒரே நாளில் 3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய விஜய் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் ஒரு வாரத்திற்கான அரசியல் நிகழ்வுகளை விஜய்யால் முடிவு செய்ய முடியும் என்றும் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சனிக்கிழமை விஜய் ஒரு ஊரில் பேசி சென்றால், அதற்கான பதிலை அரசியல் கட்சிகள் அடுத்தடுத்த நாட்களில் அளிக்கும். அதேபோல் அந்தந்த வாரங்களில் நடக்கும் மக்கள் பிரச்சனைகளையும் ஒரே நேரத்தில் பேச முடியும் என்று விஜய் கருதுகிறார்.
இதன் மூலமாக தவெக களத்தில் இருப்பதாகவும் காட்டிக் கொள்ள முடியும். அதேபோல் இந்த சுற்றுப்பயணத்தின் போது தவெகவின் மாவட்டச் செயலாளர்களை விஜய் தனது அருகிலேயே நிற்க வைக்க முடிவு எடுத்துள்ளார். மதுரை மாநாட்டிலேயே 2ஆம் கட்டத் தலைவர்கள் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட விஜய், அதற்கான தொடக்கப் புள்ளியாக இதனை பார்ப்பதாக தெரிகிறது.
மதுரை மாநாட்டிலேயே மதுரை மாவட்டச் செயலாளர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டிருந்தது. இந்த சுற்றுப்பயணத்தின் போது ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் பற்றியும் விஜய் பேசுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அதேபோல் மாவட்டச் செயலாளர்களை மக்கள் பிரச்சனையை கையிலெடுத்து போராடவும் தவெக தலைமை அறிவுறுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications