“அட்மின் போட்ட பதிவு” எச்.ராஜாவை சிக்க வைத்த ட்வீட்கள்.. சிறை தண்டனை விதிக்கப்பட்ட வழக்கின் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச்.ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்ட 2 ட்வீட்கள் அவருக்கு தலா 6 மாத காலம் சிறை தண்டனையை பரிசாகப் பெற்றுக் கொடுத்துள்ளன. அதில் ஒரு ட்வீட் கனிமொழி பற்றியது. மற்றொரு ட்வீட்டை, தனது அட்மின் பதிவிட்டது என அப்போது கூறி இருந்தார் எச்.ராஜா. எச்.ராஜா மீதான இந்த வழக்குகளின் பின்னணி பற்றி பார்க்கலாம்.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். திமுக பற்றியும், பெரியார் பற்றியும் பல தருணங்களில் கடுமையாகப் பேசி வம்பில் மாட்டிக்கொள்வது எச்.ராஜாவின் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு எக்குத்தப்பாக பல சர்ச்சைகளில் சிக்கினார் எச்.ராஜா. அந்த வழக்குகளில் தான் இன்று எச்.ராஜா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு, அவருக்கு இரு வழக்குகளிலும் தலா 6 மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா தரப்பு கோரிக்கையை ஏற்று அவர் 'அப்பீல்’ செய்ய வசதியாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா மீதான இந்த வழக்குகளின் பின்னணி பற்றி பார்க்கலாம்.

h raja bjp court

லெனின் சிலை போல பெரியார் சிலையும்: திரிபுரா மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைக்கப்பட்டதையடுத்து, அங்குள்ள லெனின் சிலை அகற்றப்பட்டது. திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட வீடியோ காட்சியை வெளியிட்டிருந்த தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட எச். ராஜா, “லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில், இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் ஜாதிவெறியர் ஈ.வெ. ராமசாமி சிலை" என்று பதிவிட்டிருந்தார்.

எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். எச்.ராஜா இந்த பதிவை வெளியிட்ட அடுத்த சில நாட்களில் திருப்பத்தூரில் பெரியாரின் மார்பளவு சிலை ஒன்றை இருவர் சுத்தியலால் தாக்கி சேதப்படுத்தினர். அவர்களில் ஒருவர் பாஜக நிர்வாகி எனத் தெரியவந்தது. பெரியார் சிலையை சேதப்படுத்திய இருவரும் கைது செய்யப்பட்டனர். பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

அட்மின் போட்ட பதிவுங்குறேன்: இந்த சம்பவங்களுக்குப் பிறகு பெரியார் குறித்த பதிவை தனக்குத் தெரியாமல் தன் அட்மின் வெளியிட்டு விட்டதாக எச். ராஜா தெரிவித்தார். "திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவை எனது அட்மின் எனது அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்" என்று தெரிவித்திருந்தார் எச்.ராஜா.

மேலும், "கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல." என்றும் கூறி இருந்தார்.

கனிமொழி பற்றிய ட்வீட்: மேலும், திமுக எம்.பி கனிமொழியை தரக்குறைவாக மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து எச். ராஜா ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. எச்.ராஜாவின் இந்தக் கருத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பல இடங்களில் எச். ராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டன.

போலீசில் புகார்: பல்வேறு காவல் நிலையங்களில் திமுகவினர், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டது. கனிமொழி மீதான அவதூறு விமர்சனம் தொடர்பாக ஈரோடு நகர போலீசாரும் பெரியார் சிலையை உடைப்பேன் என்ற கருத்து தொடர்பாக ஈரோடு மாவட்ட கருங்கல்பாளையம் காவல்துறையினரும் எச்.ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.

எச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு: இது தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

எச்.ராஜா வாதம்: அப்போது கனிமொழிக்கு எதிரான கருத்து அரசியல் ரீதியானது எனவும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக உரிய ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை, அதனை தான் பதிவிடவில்லை என்றும், அட்மின் பதிவிட்டது தன் கவனத்துக்கு வந்ததும் நீக்கப்பட்டது என்றும் எச்.ராஜா தரப்பில் வாதிடப்பட்டது. அதேசமயம், எச்.ராஜாவின் கருத்துக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்தார் நீதிபதி ஜெயவேல்.

6 + 6 மாத சிறை தண்டனை: 41 பக்க தீர்ப்பில், எச்.ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் நிரூபிக்கப் பட்டுள்ளது. எனவே அவரை குற்றவாளி என தீர்மானிப்பதாகவும், இரு பதிவுகளும் ராஜா அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது. அவ்வாறு எச்.ராஜா அனுப்பவில்லை என்பதற்கு எந்த ஆதாரங்களும் குற்றவாளி தரப்பில் இருந்து தாக்கல் செய்யவில்லை. எனவே எச்.ராஜா குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் இரண்டு வழக்குகளிலும் எச்.ராஜாவுக்கு தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பை வழங்கினார் நீதிபதி ஜெயவேல். இந்த தண்டனையை நிறுத்தி வைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எச்.ராஜா மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+