எத்தனை பேரு.. லிஸ்ட் பெருசா போகுதே..! 10th ரிசல்ட்டில் கலக்கிய ஆறு ட்வின்ஸ்..! எல்லாமே 400க்கு மேல!
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் திருப்பூர் நாமக்கல்லை சேர்ந்த இரண்டு இரட்டை சகோதரிகள் ஒரே மாதிரி மதிப்பெண்களை எடுத்து இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் 4 இரட்டையர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் என்ற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நிறைவடைந்தது. 4,107 மையங்களில் 9,08,000 மாணவ-மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருந்தனர்.
தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி 88 முகாம்களில் நடைபெற்றது. பின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியும் நிறைவடைந்தது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகள்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் - 91.55% ஆகவுள்ளது. கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரட்டையர்கள் ஆதிக்கம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் திருப்பூர் நாமக்கல்லை சேர்ந்த இரண்டு இரட்டை சகோதரிகள் ஒரே மாதிரி மதிப்பெண்களை எடுத்து இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் 4 இரட்டையர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் என்ற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி சூளை பகுதியில் வசிக்கும் முருகமணி - முத்துக்குமரன் தம்பதியினரின் இரட்டை குழந்தைகளான ஹரிணி - சபரி ஸ்ரீ இருவரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர்.

சகோதரிகள்: நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இருவரும் ஒரே மதிப்பெண்ணை பெற்று அசத்தியிருக்கின்றனர். இருவரும் 484 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தந்தை இறந்த நிலையிலும் தாயார் கொடுத்த அன்பாலும் ஊக்கத்தாலும் நன்கு படித்ததாகவும் தற்போது ஒரே மதிப்பெண்ணை எடுத்திருக்கும் தாங்கள் நல்ல வேலைக்கு சென்று தாயை பார்த்துக் கொள்வோம் எனக் கூறுகின்றனர்.
நாமக்கல்லில் ஆச்சர்யம்: இதேபோல நாமக்கல் ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் - கலைராணி தம்பதியினரின் இரட்டை குழந்தைகளான அக்ஷயா அகல்யா ஆகியோரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஒரே மதிப்பெண்ணை பெற்று இருக்கின்றனர். சொல்லி வைத்தார் போல் இருவருமே 463 மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். ஒரே மதிப்பெண்ணைப் பெற்ற இரட்டையர்களை பெற்றோர் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்தி உள்ளனர்.
3 இரட்டையர்கள்: இது மட்டுமல்லாமல் நாமக்கல்லில் 3 இரட்டையர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்கின்றனர். நாமக்கல் ராசிபுரம் பட்டணம் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று இரட்டை சகோதர சகோதரிகள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்கின்றனர். அதில் மோனிகா 488 மதிப்பெண்ணும் மோனிஷா 477 மதிப்பெண்ணும் பெற்றிருக்கின்றனர். ஹவின் என்ற மாணவன் 456 மதிப்பெண்களும் ஹாசன் என்ற மாணவன் 456 மதிப்பெண்களும் பெற்றிருக்கின்றனர். இதே போல கிரிஷ்யா என்ற மாணவி 446 மதிப்பெண்ணும் அவரது சகோதரியான கிருஷ்மதி 409 மதிப்பெண்ணையும் பெற்றிருக்கின்றனர்.

ஒரு மதிப்பெண் வித்தியாசம்: இது மட்டுமல்லாமல் திருப்பூர் அருகே கணியூரில் இரட்டை குழந்தையாய் பிறந்த சகோதரர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே ஒரு மார்க் வித்தியாசத்தில் மதிப்பெண்களை எடுத்திருக்கின்றனர். தனியார் பள்ளியில் படிக்கும் இரட்டை குழந்தைகளான ஆயிஷா லுபாபா ஆயிஷா உமாமா ஆகியோர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் லுபாபா 418 மதிப்பெண்களையும் உமாமா 417 மதிப்பெண்களையும் பெற்றிருக்கிறார்.
+2 தேர்வு: கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான +2 தேர்வில் இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தினர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பா - சவிதா தம்பதியின் மகன்களான நிர்மல், நிகில் 12ஆம் வகுப்பு போது தேர்வில் கணக்கு பாடப்பிரிவு எடுத்து படித்த நிலையில், இரட்டையர்கள் இருவரும் 478 மதிப்பெண்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications