சென்னை அருகே நண்பர்களுக்குள் நடந்த சண்டை.. கொலையில் முடிந்த விபரீதம்! இருவர் பலி!
சென்னை: சென்னையை அடுத்த மறைமலை நகரில் நேற்று இரவு நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய கொலையாளிகளைப் பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மறைமலை நகரைச் சேர்ந்த விமல் (22), ஜெகன் (23) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவர் மீதும் 20க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரை அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விமல் (வயது 22). இவரது நண்பர் ஜெகன் (24). இவர்கள் நேற்று இரவு வழக்கம்போல காந்தி நகர் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது நண்பர்கள் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தின்போது அடையாளம் தெரியாத 3 பேர் விமல் மற்றும் ஜெகன் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதில் விமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த ஜெகன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் ஜெகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் வெட்டி விட்டு தப்பிச் சென்ற 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இருவரின் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications