மணிப்பூர் பெண்களின் கண்ணியத்தை காப்பாற்றுங்க.. மத்திய அரசை விளாசிய உதயநிதி ஸ்டாலின்.. அட்டாக்
சென்னை: மணிப்பூரில் இரண்டு பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மணிப்புரி பெண்களின் கண்ணியத்தை காக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மணிப்பூரில் சிறுபான்மையினராக இருக்கும் குக்கி பழங்குடி மக்கள் அங்குள்ள மலை பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மலைப்பகுதி மற்றும் அதையொட்டியுள்ள சமவெளி பகுதிகளில் இவர்களை தவிர வேறு யாரும் நிலங்களை வாங்கவோ விற்கவோ முடியாது. இப்படி இருக்கையில் அங்கு பெரும்பான்மையாக இருக்கும் மைத்தேயி/மெய்டெய் மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

மைத்தேயி/மெய்டெய் மக்களுக்குதான் மாநிலத்தில் அதிக அளவுக்கு வாக்குகள் இருக்கிறது. எனவே இதனை கவனித்த பாஜக அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புக்கொண்டது. இதையே தனது தேர்தல் வாக்குறுதியாக வைத்து சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. எதிர்பார்த்ததை போலவே பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெற்றது. இதனையடுத்து மைத்தேயி/மெய்டெய் மக்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
நீதிமன்றமும் இதற்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் குக்கி மக்கள் போராட்டத்தை தொடங்கினர். மைத்தேயி/மெய்டெய் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் தங்கள் உரிமைகளை இழக்க நேரிடும் என்று அவர்கள் விமர்சித்து போராட்டத்தில் இறங்கினர். இந்நிலையில், இதற்கு எதிராக மைத்தேயி/மெய்டெய் மக்கள் ஊர்வலம் பேரணி சென்றனர். இது ஒரு கட்டத்தில் மோதலாக வெடித்தது.
மோதலில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 135க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால் பிரதமர் இது குறித்து எதுவும் பேசவில்லை. தற்போது இளம்பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ பரவலாக பகிரப்பட்ட நிலையில், இந்த குற்றத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஆனால், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அதாவது, "மணிப்பூரில் இரண்டு பெண்கள் ஆயுதம் ஏந்திய கும்பலால் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அம்மாநிலத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அம்மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்கவும், மணிப்புரி பெண்களின் உயிரையும் கண்ணியத்தையும் பாதுகாக்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications