தமிழிசை vs உதயநிதி மோதல்: நாவை அடக்குங்க.. தமிழ்நாட்டுக்கு வந்து சொல்ல சொல்லுங்க.. உதயநிதி பதில்
சென்னை: வார்த்தைகளை கவனமாக பேசாவிட்டால் உதயநிதி எதிர்மறை கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டும் என்று தமிழிசை சவுந்தராஜன் கூறியிருந்தார். தன்னை பற்றி புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதை, தமிழ்நாட்டில் வந்து பேச சொல்லுங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
புரட்டி போட்ட புயல்: மிக்ஜாம் புயல் சென்னையை சின்னாபின்னமாக்கி விட்டது. புறநகர் பகுதிகளை புரட்டிப்போட்டு விட்டது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பல பகுதிகள் இன்னமும் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வரவில்லை. வட சென்னை பகுதியோ எண்ணெய் கசிவு பிரச்சினையிலும் சிக்கியுள்ளது.

புயல் நிவாரணம்: மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரூ.5000 கோடி நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால், மத்திய அரசோ ரூ.450 கோடியை மட்டுமே வழங்கி இருக்கிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அமைச்சர்கள் விமர்சனம்: மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்.. அவர்களிடம் நாங்கள் என்ன பிச்சையா கேட்கிறோம்?" என அமைச்சர்கள் கேள்வியெழுப்பி உள்ளனர். இதனிடையே, புயல் நிவாரணத்திற்கு குறைவான தொகை ஒதுக்கியது குறித்து மத்திய அமைச்சர் ஒருவர், "அவர்கள் கேட்டதும் பணம் எடுத்துக் கொடுக்க இது என்ன ஏடிஎம் மா?" என கூறினார்.
உதயநிதி ஸ்டாலின்: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசை, மத்திய குழு பாராட்டியதாக கூறினார்.
அப்பன் வீட்டு காசு: புயல் நிவாரண நிதி தொடர்பான மத்திய அமைச்சர் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், நான் என்ன அவங்க வீட்டு அப்பன் காசையா கேட்கிறோம். மக்கள் கொடுத்த வரி பணத்தை தானே கேட்கிறோம் என்று பதில் அளித்திருந்தார். உதயநிதி ஸ்டாலினின் கூறிய இந்த கருத்து பாஜகவினரை டென்சன் ஆக்கியுள்ளது. எப்படி மத்திய அமைச்சரை பார்த்து உதயநிதி மரியாதை இல்லாமல் பேசலாம்?" என அக்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழிசை சௌந்தரராஜன்: இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய தெலங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், அவங்க தாத்தா பதவியை, அவங்க அப்பன் பதவியை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவர் அப்படிதான் பேசுவார் என்று கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாக கூறினார். 1000 குடமுழுக்கு நடத்தி விட்டதாக சேகர்பாபு பெருமையாக கூறி வருகிறார். ஆனால் ஸ்ரீரங்கம் கோவில் கருவறைக்கு பக்கத்தில் ரத்த முழுக்கு நடந்துள்ளது இது கண்டனத்திற்கு உரியது என்றார்.
திமுக தொண்டன்: அப்போது செய்தியாளர்கள், உதயநிதியின் கருத்து பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்த தமிழிசை சௌந்தரராஜன், அவங்க தாத்தா, அப்பா பதவியை அனுபவிக்கிறார் உதயநிதி ஸ்டாலின் அப்படித்தான் பேசுவார் என்றார். சாதாரண திமுக தொண்டன் கூட உதயநிதியை பார்த்து கேட்க முடியுமே.. இது என்ன உங்க அப்பன் வீட்டு கட்சியா? என்று கூறினார்.
அடக்க வேண்டும்: கலைஞர் உரிமைத் தொகைன்னு சொல்றீங்களே.. அந்த பணத்தை என்ன உங்கள் வீட்டில் இருந்தா எடுத்துக் கொடுக்கிறீர்கள்? உதயநிதி முதலில் வார்த்தைகளை அடக்க கற்றுக்கொள்ள வேண்டும். அவர் வாயை அடக்கவில்லை என்றால் அவர் ஒரு எதிர்மறை தலைவராக தான் எல்லோராலும் பார்க்கப்படுவார்.
நிறுத்துங்க: கலைஞரோட பேரன் தானே நீங்க.. கலைஞர் இப்படிதான் பேசுவாரா? திட்டுவதாக இருந்தாலும் அழகு தமிழில் பேசக்கூடிய தலைவர்ங்க கலைஞர். எனவே, இப்படி பேசுவதை உதயநிதி ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், மற்றவர்களும் அவரை பார்த்து அதே மாதிரி கேள்விகளை கேட்டு விடுவார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
உதயநிதி பதில்: இது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், யாரு தெலுங்கானா ஆளுநரா? அவங்களை தமிழ்நாட்டில வந்து பேசச் சொல்லுங்க என்று பதில் அளித்தார். ஆனால் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று பேசியது தமிழ்நாட்டில் உள்ள கோவையில்தான் என்பதை உதயநிதி ஸ்டாலின் கவனிக்க தவறி விட்டார் என்கின்றனர் பாஜகவினர்.












Click it and Unblock the Notifications