நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து களமாடும் உதயநிதி... புகழ்ந்த கனிமொழி.. புன்னகைத்த மாறன்
கொடை, கருணை, நீதி தவறாமை, மக்களை பாதுகாத்தல் இந்த நான்கும் உடைய அரசர் வேந்தர்களுக்கு ஒளி போன்றவர் என்று முதல்வர் மு.க ஸ்டாலினை கனிமொழி வாழ்த்தியுள்ளார்.
சென்னை: நல்ல மன்னர் எப்படிப்பட்டவர் என்பதை உணர்த்தும் திருக்குறளை மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தியுள்ளார் கனிமொழி..நீட் தேர்வுக்கு எதிராக களமாடும் உதயநிதி என்று கனிமொழி வரவேற்ற போது துர்கா ஸ்டாலின், உதயநிதி, தயாநிதி மாறன் முகங்களில் புன்னகை பூத்தது. இந்த மேடை ட்ரைலர் மட்டும்தான் இன்னும் படம் வரும் என்றும் பொடி வைத்து பேசினார் கனிமொழி.
சென்னையில் இன்று நடைபெற்ற, முதல்வர் ஸ்டாலினின் உங்களின் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில்தான் இவையெல்லாம் நடைபெற்றன. இதோ நிகழ்ச்சியின் அம்சங்கள்..
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப்பேசினார் கனிமொழி. அண்ணன் தளபதி என்று அன்போடு அழைத்து விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார் கனிமொழி கருணாநிதி.
ஒரு மன்னர் கொடை செய்ய வேண்டும். மக்களுக்கு தானங்களை கொடுத்து உதவ வேண்டும், கருணையோடு அதாவது அருள் செய்தல் வேண்டும். முகம் மலர்ந்து இனியவற்றை கூற வேண்டும், செங்கோல் புரிய வேண்டும் நீதி நூல்களும் அரசாட்சி நூல்களும் கூறியப்படி நாட்டை நிர்வகிக்க வேண்டும். அதாவது மக்களையும் அவர்களது குடிமைகளையும் பாதுகாத்துப் பேண வேண்டும். அவர்கள் வளர்ச்சிக்கு தேவையான சூழலை உருவாக்க வேண்டும். அவர்கள் பிணிகளை போக்க வேண்டும். நாட்டில் குற்றங்கள் நடக்காது மக்களை நிம்மதியில் வைக்க வேண்டும். இவை நான்கையும் ஒரு அரசர் செய்தால் அவரின் புகழ் ஒரு விளக்கின் ஒளிப்போல் பிரகாசிக்கும் என்று குறளின் பொருளையும் சொல்லி அண்ணன் தளபதி ஸ்டாலின் என்று வரவேற்று பேசினார்.
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்று பேசிய கனிமொழி, உதயநிதி ஸ்டாலினையும் வரவேற்றார். அப்போது நீட் தேர்வுக்கு எதிராக ஒலிக்கும் உதயநிதியின் குரல் நெஞ்சுக்கு நீதியாக ஒலிக்கிறது என்றும் சொன்னார்.
அப்போது உதயநிதியின் அருகில் அமர்ந்திருந்த துர்கா ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோரும் சிரித்து ரசித்தனர். கருணாநிதியைப் பற்றி சொல்லும் போது கனிமொழியின் குரல் தழுதழுத்தது. தலைவர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகம் போல இந்த புத்தகம் இருக்கும் என்று சொன்னார். புத்தகத்தின் மொழி நடையைப் பாராட்டி பேசினார் கனிமொழி.
பிறப்பு முதல் மிசா கைதி வரை நீளும் இந்த புத்தகம் ஒரு அரசியல் ஆவணம் என்று சொன்னார் கனிமொழி. இதையெல்லாம் பார்க்க அப்பா இல்லை என்று சொன்ன போது கனிமொழியின் குரல் கம்மியது. உடன் பிறப்புகளின் அன்பில் அப்பாவின் அன்பு பொங்கி வழிகிறது என்று சொன்னார். இந்த மேடை ட்ரைலர் மட்டும்தான் இன்னும் படம் வரும் என்றும் சொன்னார் கனிமொழி.
கனிமொழியின் வரவேற்புக்குப் பிறகு மு.க ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் புத்தகத்தை ராகுல்காந்தி வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications