Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதயநிதி துணை முதல்வர் என அடிக்கடி வதந்தி பரவுவது ஏன் தெரியுமா? அழகிரி சம்பவம் நினைவு இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியைக் கொடுப்பதை எதற்காக ஸ்டாலின் தாமதப்படுத்தி வருகிறார்? அதற்குள் உள்ள அரசியல் கணக்கு என்ன?

வாழ்க்கை ஒரு வட்டம் என்ற சினிமா வசனம் தான் இப்போது நினைவுக்கு வருகிறது. திமுகவில் மீண்டும் ஒரு வட்டம் தொடங்கி இருக்கிறது. சரியாக 24 ஆண்டுகள் முன்னதாக நடைபெற்ற அதே நிகழ்வு மீண்டும் இப்போது எழுந்துள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் திமுகவின் முப்பெரும் விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய அன்றைய பொதுச்செயலாளர் அன்பழகன், "திராவிட இயக்கத்தின் கடிவாளம் எப்போதும் அதனைப் பாதுகாக்கும் கைகளிலேயே இருந்து வந்திருக்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர், இப்போது ஸ்டாலின் பிறகு அவரது மகன் என்று தொடரும்" என்ற ஒரு கருத்தை முன்வைத்தார்.

udhayanidhi stalin mk stalin

அன்பழகனின் இந்தப் பேச்சு பல ஆண்டுகளாக திமுகவுக்குள் நடந்துவந்த விவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. மு.கருணாநிதியின் அடுத்த அரசியல் வாரிசு யார்? என்ற பல ஆண்டுகால குழப்பத்திற்கு தன் பேச்சின் மூலம் கட்சியினர் யாரை பின் தொடர வேண்டும் என்பதற்காக ஒரு பாதையை தெளிவுபடுத்தி இருந்தார் அன்பழகன். இந்த முப்பெரும் விழா 17 ஆம் தேதி நடந்தது. அடுத்த சில நாட்களில் கட்சிக்குள் ஒரு பூகம் கிளம்பப் போகிறது என்பதை ஊடகங்கள் பலவும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அதேபோல் அதே மாத 19 ஆம் தேதி கட்சியிலிருந்து திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்து வந்த மு.க.அழகிரி அக்கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக அறிவாலயம் அறிக்கை வெளியிட்டது. அழகிரி ஆதரவாளர் ஒருவருக்கு மக்களவை சீட்டுத் தரவில்லை என்று அவர் கட்சிக்குள் பூகம்பம் ஏற்பட்டு வந்த நிலையில் இந்த நீக்கம் நடந்தது. முதல்முறையாக அழகிரி கட்சியைவிட்டு நீக்கி வைக்கப்பட்டார்.

இதன் மூலம் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என ஊடகங்களில் அடிக்கடி விவாதிக்கப்பட்டு வந்த விசயம் தற்காலிகமாக அமைதியானது. திமுகவைப் பொறுத்தவரை ஸ்டாலினுக்கு அடுத்துத்தான் அழகிரி என்பதை அன்பழகனைக் கொண்டு கருணாநிதி மறைமுகமாகத் தொண்டர்களுக்குப் புரியவைத்தார். ஆனால், கருணாநிதி நினைத்ததைப் போல அழகிரியை எளிதாக ஒதுக்கி வைக்க முடியவில்லை. 19ஆம் தேதி மதுரை சுற்றுவட்டாரங்களில் தொடங்கிய கலவரம் 22ஆம் தேதி வரை நீண்டது. மூன்று நாட்கள் வன்முறை தலைவிரித்தாடியது. அழகிரியின் ஆதரவாளர்கள் தங்களின் பலம் என்ன என்பதைக் கட்சிக்கும் தலைமைக்கும் உணர்த்தினார்கள்.

ஆனால், என்ன நடந்தது? திமுகவின் துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவராக ஸ்டாலின் பதவி உயர்த்தப்பட்டார். இந்திரா காந்திக்குப் பிறகு ராஜீவ்காந்தி கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது ஸ்டாலினிடம் வருங்காலத்தில் திமுகவின் தலைவராக நீங்கள்தானே வரப் போகிறீர்கள்? என்று கேட்ட போது, 'திமுக ஒன்றும் சங்கர காங்கிரஸ் கட்சியைப் போலச் சங்கர மடம் இல்லை' என்று மறுத்தார். திமுகவுக்கு உள்ளாகவே அழகிரி மற்றும் ஸ்டாலின் இடையேயான ஒரு போட்டி என்பது மு.கருணாநிதியே திட்டமிட்டு உருவாக்கி வரும் பிம்பம் என்று அன்றைக்கு எதிர்க்கட்சியினர் ஒரு கருத்தை முன்வைத்தனர். கட்சியின் கட்டுப்பாடு என்பது தனது குடும்பத்திற்குள்ளாகவே இருக்க வேண்டும் என்பதற்காக அழகிரி மற்றும் ஸ்டாலினை வைத்து இருதுருவ அரசியலைக் கருணாநிதி கட்டமைக்கிறார் என்று சொன்னார்கள்.

ஒரு கட்டத்திற்கு மேல் ஒரே உறையில் இரண்டு கத்திகள் சாத்திய இல்லை என்ற உண்மையைக் கருணாநிதி உணர்ந்தார். அழகிரியின் மோதல் போக்கு உச்சகட்டத்தை தொட்டதை அவர் யூகிக்கத் தொடங்கினார். அதன் விளைவாக மு.க.அழகிரி அக்கட்சியிலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி தற்காலிகமாக இரண்டாவது முறையாக நீக்கப்பட்டார். உடனே இது தொடர்பாக அடுத்த நாள் 25 ஆம் தேதி மு.கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அந்தக் கூட்டத்திற்குப் பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், "திமுக தலைமையையும், கட்சியின் முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும் திமுகவுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும் திமுகவிலிருந்து அறவே நீக்கி வைக்கப்படுகிறார்" என்று அறிவித்தார்.

தனது மூத்த மகனைக் கட்சியை விட்டு நீக்கியது தொடர்பாக விளக்கம் அளித்த அன்றைய திமுக தலைவர் கருணாநிதி, "தற்காலிகமாக நீக்கப்பட்ட அழகிரி அது தொடர்பாக விளக்கம் அளிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறார். திமுக தலைவர்களைப் பற்றியும் அவதூறு கூறி வருகிறார். அதனால் நானும் அன்பழகனும் கலந்து பேசி அழகிரியைக் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி இருக்கிறோம்" என்று விளக்கம் அளித்தார்.

மு.கருணாநிதி நினைத்திருந்தால் அழகிரியின் அதிகாரத்தை மிக எளிதாகப் பறித்திருக்க முடியும். அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் அண்ணாதுரை காலத்திலிருந்து கட்சி பல பிளவுகளைக் கண்டபோதும் அசையாமல் உறுதியோடு செயல்பட்டவர். அனுபவம் மிக்கவர். ஒரு கட்சியின் நிர்வாகம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அதன் வேர் வரை சென்று அறிந்து வைத்திருந்தவர். ஆகவே, அழகிரியைக் கட்சியின் ஒரு எதிர் சக்தியாகக் கட்டமைத்து, அதை லாவகமாகப் பயன்படுத்தி அப்படியே ஜனநாயகத் தன்மையுடன் கட்சியை ஸ்டாலினிடம் ஒப்படைப்பதைப்போல மிகச் சரியாகக் காய்களை நகர்த்தினார். கருணாநிதியின் ராஜதந்திரத்திற்கு முன்பாக அழகிரி அரசியல் வாழ்க்கையை இழந்தார். மகனாக இருந்தும் அவரை எதிர்கொள்ள முடியவில்லை.

இப்போது ஸ்டாலின் நினைத்தால் உதயநிதியை துணை முதல்வராக அறிவித்துவிட முடியும். ஆனால், அதை அவர் செய்ய மறுக்கிறார். 'துணை முதல்வராக உதயநிதியைக் கொண்டுவர வேண்டும் என்ற கருத்துதான் வலுத்து உள்ளது. ஆனால் பழுக்கவில்லை' என்று அவரது தந்தையைப் போலவே சாதுரியமாகப் பேசி பிரச்சினையை அமைதியாக்கிவிட்டார். ஆனாலும், கட்சியில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் உதயநிதியை து.முதல்வராகக் கொண்டுவர வேண்டும் எனத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அன்று ஸ்டாலின் அழகிரி விசயத்தில் திமுக என்ன மாதிரியான காய்களை நகர்த்தியதோ அதே காய்களை ஸ்டாலின் இப்போது நகர்த்துகிறார்.

கிட்டத்தட்ட திமுக சார்பில் 9 முறைக்கு மேல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம். அவரை பொன்விழா மேடையில் மறைமுகமாகப் பேச வைக்கிறது திமுக தலைமை. பழனிமாணிக்கம் பேசுகையில், 'திமுகவின் வெள்ளிவிழாவைக் கருணாநிதி கொண்டாடினார். கட்சியின் பவள விழாவை முதல்வர் ஸ்டாலின் கொண்டாடி இருக்கிறார். வைர விழாவைக் கொண்டாடுவதற்குக் கட்சிக்கு ஒரு எதிர்கால தலைவர் தேவை. ஆகவே எங்களை வழி நடத்த ஒருவரை அடையாளம் காட்ட வேண்டும். இன்னும் ஏன் தயக்கம்? உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும்.மூத்த தலைவர் அன்பழகன் இருக்கும் போது இளையவரான ஸ்டாலினை துணை முதல்வராக அவர் ஏற்றுக்கொள்ளவில்லையா. அவரைவிட நாங்கள் பெரிய தலைவர்கள் இல்லை. எனவே உடனே ஒரு முடிவு எடுங்கள்' என்று கோரிக்கை விடுத்துப் பேசினார்.

முன்பே சொன்னதைப் போலக் கடந்த 2000ஆம் ஆண்டு அன்பழகன் ஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் என்றார். அதுதான் இப்போது நடக்கிறது. ஆனால், அதை உடனே செய்யக் கூடாது. ஒரு விவாதம் நடக்க வேண்டும். அதன் மூலம் உதயநிதி மீது ஒரு பார்வை விழ வேண்டும். அது அவரது செல்வாக்கை உயர்த்தும். இது எல்லாம் முன்பே திமுக செய்ததுதான். அதை உணர்ந்துதான் இன்று பேசிய உதயநிதி ஸ்டாலின், 'எல்லா அமைச்சர்களுமே முதல்வருக்கு துணையாகத்தான் இருக்கிறோம். எந்த முடிவாக இருந்தாலும் முதல்வர்தான் எடுப்பார். முழுக்க முழுக்க அது முதல்வரின் முடிவுதான்" என்று தெரிவித்து இருக்கிறார்.

இந்த வசனங்கள் எல்லாம் மீண்டும் 30 ஆண்டுகளுக்கு முன்னால் போய் பல சம்பவங்களை அசைபோட்டுப் பார்க்க வைக்கிறது. அன்று ஸ்டாலின் மையமாக இருந்தார். இன்று உதயநிதி மையமாக இருக்கிறார். எப்படிப் பார்த்தாலும் இந்தப் பதவி எளிய விசயம். அதற்கு ஒரு நடைமுறை உள்ளது. அதை எப்படிச் செய்து முடிக்க வேண்டும் என முன்பே கருணாநிதி பாதை போட்டுக் கொடுத்துள்ளார். அது விரைவில் நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+