சென்னையில் ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் 2023 இரவுப்போட்டி! உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் டிக்கெட்!
சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் - 2023 (F4) போட்டிக்கான டிக்கெட் விற்பனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து முதல் டிக்கெட்டை பெற்றுக்கொண்டார்.
இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் தலைநகரான சென்னையில் "சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் (F4) நடத்தப்படவுள்ளது.

சென்னையில் ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் - 2023 (F4) இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகியவை சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவு போட்டியாக (Street Circuit) நடத்தப்படுகிறது. தீவுத் திடலில் இருந்து ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு - அண்ணா சாலை - சிவானந்த சாலை - நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடல் வரை நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் தெற்காசியப் பகுதிகளில் முதல் முறையாக இரவுப் போட்டியாக சாலைகள் வழியாக நடத்தப்படுகின்ற மிகப் பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும். இந்த சிறப்புமிக்க இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஃபார்முலா F4 இந்தியன் சாம்பியன்ஷிப் என்பது FIA-சான்றளிக்கப்பட்ட சாம்பியன்ஷிப் ஆகும். இந்தப் போட்டியினை தமிழ்நாட்டில் நடத்துவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 40.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். சென்னையில் ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் - 2023 (F4) போட்டி சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் - 2023 (F4) போட்டிக்கான டிக்கெட் விற்பனையை தொடங்கி வைத்து முதல் டிக்கெட்டை ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரவைட் லிமிடெட் (RPPL) தலைவர் அகிலேஷ் ரெட்டியிடமிருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், சென்னையில் 2023 டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் -2023 (F4) போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.












Click it and Unblock the Notifications