பிரமாண்டமாக நடக்கும் திமுக இளைஞரணி கூட்டம்.. இரவே வந்து ஏற்பாடுகளை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று (டிசம்பர் 14) நடைபெறும் நிலையில், முந்தைய நாள் இரவே திருவண்ணாமலைக்கு வந்து, கூட்டத்திற்கான முன்னேற்பாட்டு பணிகளை நேரில் பார்வையிட்டார் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கானப் பணிகளைத் தீவிரமாகச் செய்துவருகிறது திமுக. இந்த நிலையில், திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று (டிசம்பர் 14) திருவண்ணாமலையில் நடைபெறுகிறது. இதில் 1.30 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்தச் சந்திப்பில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று (டிசம்பர் 13) இரவு நிகழ்ச்சி நடைபெறும் இடமான வாணியந்தாங்கலுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வந்தடைந்தார். திருவண்ணாமலை வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். அதைத்தொடர்ந்து இளைஞரணி நிர்வாகிகளின் மண்டல கூட்டம் நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்தார் உதயநிதி ஸ்டாலின்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் கிளை- வார்டு- பாகங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் மிக பிரமாண்டமான வகையில் நாளை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை இன்று நேரில் பார்வையிட்டோம்.
வருகை தரும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து, தற்காலிக மருத்துவமனையை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தோம்.
📌தி.மு.கழக வரலாற்றை விளக்கும் வரலாற்று புகைப்பட கண்காட்சி
📌கழக முன்னோடிகள் பற்றிய குறிப்புகள் அடங்கிய புகைப்பட கண்காட்சி
📌கழக இளைஞர் அணியின் 45 ஆண்டு கால பயணத்தை விளக்கும் புகைப்படங்களின் அணிவகுப்பு
📌முத்தமிழறிஞர் பதிப்பக அரங்கம்
📌கழகத் தலைவர் ஸ்டாலின் சிறப்புரையாற்ற போகும் மேடை அமைப்பு… ஆகியவற்றை ஒருவொன்றாக பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
New Dravidian Stock உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்! அனைவரும் பாதுகாப்பாக கலைஞர் திடலை வந்தடையுங்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகளின் இந்தச் சந்திப்பில், 29 கட்சி நிர்வாக மாவட்டங்களில் உள்ள 91 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 1,30,329 கிளை- வார்டு- பாக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்தச் சந்திப்பில் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.
இதற்காக 135 ஏக்கர் அளவில் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 5000-க்கும் மேற்பட்ட பேருந்துகளையும் வாகனங்களையும் நிறுத்துவதற்கு இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகை தரும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்குப் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications