அந்த பயம் இருக்கட்டும்.. மேடையில் அண்ணாவுடன் - ஸ்டாலினை ஒப்பிட்டு பேசிய உதயநிதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛‛காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவற்றை நம் முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டங்களை எல்லாம் என்றாவது மாற்றிவிடலாம் என்று நினைத்தால் கூட அவர்களின் மனதில் நிச்சயம் ஒரு பயம் வரும். அந்த பயம் இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆள்வது நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று தான் பொருள்'' என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரில் இன்று விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக அரசின் நலத்திட்டத்தில் பள்ளி, கல்லூரியில் படித்து சாதனை புரிந்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றார்.

udhayanidhi stalin dmk

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள், மாணவ-மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள் உள்பட பலரும் பங்கேற்றனர். இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

நம் முதலமைச்சர் அடிக்கடி சொல்வது ஒன்றே ஒன்றை தான் . கல்வி மட்டுமே அழிக்க முடியாத சொத்து என்று அடிக்கடி சொல்லி வருகிறார்.

கல்வி மாணவர்களுக்கான சொத்து என்றால். இங்கு அமர்ந்து இருக்கும் மாணவர்கள் தான் தமிழ்நாட்டின் சொத்து. கடந்த மாதம் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யும் நிகழ்ச்சிக்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை, முதல்வர் அழைத்து இருந்தார். அப்போது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இந்த திட்டத்தை பாராட்டியதோடு, பஞ்சாப்பில் அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுப்பதாக கூறினார்.

இன்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த விழாவுக்காக அழைக்கப்பட்டுள்ளார். அது அவருக்கு சிறந்த அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். நம்முடைய திராவிட மாடல் அரசு கல்வி, வேலைவாய்ப்பு முதல் உயர்கல்வி வரை மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 1920ம் ஆண்டில் தமிழ்நாடு தான் முதல் முதலில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது. அப்போது நீதி கட்சி அந்த திட்டத்தை கொண்டு வந்தது.

அதேமாதிரி இந்தியாவில் முதல் முதலாக பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு கொடுத்த மாநிலமும் தமிழ்நாடு தான். வேலைக்கு காலையில் செல்லும் பெற்றோர் குழந்தைகளுக்கு டிபன் செய்து கொடுக்காத நிலை தான் இருந்தது. சாப்பிடாமல் வகுப்புக்கு செல்லும் குழந்தைக்கு காது பசியால் அடைக்கும். வயிறு கிள்ளும். அவர்களால் எப்படி பாடத்தை கவனிக்க முடியும் என்று பெற்றோர்கள் வருத்தப்பட்டது உண்டு. ஆனால் இன்று அந்த பிரச்சனைகள் அனைத்தையும் முதல்வர் தீர்த்து வைத்துள்ளார்.

பள்ளி படிப்பை முடித்த பிறகு மாணவர்கள் குடும்ப சூழல் காரணமாக உயர்கல்விக்கு வராமல் இருந்து விடக்கூடாது என்பதற்காக கல்லூரி மாணவ-மாணவிகளுக்காக புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டங்களின் மூலம் மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் வந்த பிறகு பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வி செல்லும் வாய்ப்பு இருந்தும் பொருளாதார சூழல் காரணமாக உயர்கல்வியை தொடர இயலாத கிட்டத்தட்ட 15 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்தும் வகையில் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. படிப்புடன் வேலைக்கான திறமையை இந்த திட்டம் வழங்கி வருகிறது. வேலைக்கு செல்வதை தாண்டி மற்றவர்களுக்கும் வேலை கொடுக்கலாம் என்ற தன்நம்பிக்கையை நான் முதல்வன் திட்டம் வழங்கி வருகிறது.

கல்வி மட்டுமின்றி உடற்கல்வி, விளையாட்டுக்கும் முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். விளையாட்டு வீரர்களுக்கும் இந்த மேடையில் இடமளித்த முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கல்வியை போல் உடற்கல்வியும் முக்கியம் என்று கூறியுள்ளார். பொருளாதார பிரச்சனை விளையாட்டு வீரர்களுக்கு தடையாக இருக்க கூடாது என்று முதல்வர் நினைத்தார்.

இதனால் தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பில் இந்தியாவில் முதல் முறையாக முதல்வர் ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார். இந்த பவுண்டேஷன் சார்பில் இப்போது ரூ.25 கோடி மதிப்பிலான நிதி உதவியும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி உள்ளோம். 100க்கும் மேற்பட்டோருக்கு அரசு துறையில் வேலை வழங்கி உள்ளார். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் அரசு வேலை வழங்குவது இன்னும் அதிகரிக்கப்பட உள்ளது.

இந்த விழாவுக்கு நிறைய ஆசிரியர்கள், மாணவர்கள் வந்துள்ளீர்கள். நான் ஆசிரியர்களிடம் அடிக்கடி வைக்க கூடிய ஒரே கோரிக்கை இதுமட்டும் தான். கணிதம், அறிவியல் டீச்சர்.. எங்களின் விளையாட்டு பீரியடை கடன் வாங்கி பாடம் நடத்துவதே அறவே தவிர்த்து விட வேண்டும். ஒரு விளையாட்டு துறை அமைச்சராக மாணவர்கள் சார்பில் நான் கோரிக்கையாக வைக்கிறேன்.

பேரறிஞர் அண்ணா 3 விஷயங்களை கூறினார். ‛நான் முதல் அமைச்சரான பிறகு 3 காரியங்களை தமிழக மக்களுக்காக செய்துள்ளேன். தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டி இருக்கிறேன். தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை. இருமொழி கொள்கை மட்டும் தான் என்று சட்டம் இயற்றி இருக்கிறேன். சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறேன். எனக்கு பிறகு ஆட்சிக்கு வரக்கூடியவர்கள் இந்த மூன்றையும் மாற்ற நினைத்தால் அவர்கள் மனதில் ஒரு அச்சம் வரும். அந்த அச்சம் வரும்போதெல்லாம் இதையெல்லாம் மாற்றிவிட்டால் மக்கள் என்ன செய்வார்கள்? என்ற பயம் வரும். அந்த பயம் எதிரிகளை எவ்வளவு நாள் வாட்டுகிறதோ அதுவரைக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் இந்த அண்ணாதுரை தான் ' என்று கூறினார்.

அதேயையே இப்போது கொஞ்சம் மாற்றி சொல்ல விரும்புகிறேன். காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவற்றை நம் முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டங்களை எல்லாம் என்றாவது மாற்றிவிடலாம் என்று நினைத்தால் கூட அவர்களின் மனதில் நிச்சயம் ஒரு பயம் வரும். அந்த பயம் இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆள்வது நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று தான் பொருள்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+