சும்மா இல்ல.. கூப்பிட்டு ரூ.1 கோடி கொடுத்த அமைச்சர் உதயநிதி.. நெகிழ்ந்து போய் நன்றி சொன்ன விஷால்!
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 கோடிக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடி காரணமாக தாமதமாகி வரும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதற்காக ரூபாய் ஒரு கோடியை நிதியாக அளித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணி, நடிகர் சங்கத்திற்கு என பிரமாண்டமான கட்டிடம் கட்ட முடிவு செய்தது. சென்னை தியாகராய நகர் அருகே நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் திடீரென நிதி நெருக்கடி காரணமாக பணிகள் பாதியில் நிற்கின்றன.
நின்று போன நடிகர் சங்க கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கி இந்த கட்டிடத்தை கட்டுவதற்காக நிதி திரட்டும் நடவடிக்கையில் நடிகர் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சங்கத்தினரை நேரில் அழைத்து, தனது சொந்தப் பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் விஷால், கார்த்தி மற்றும் கருணாஸ் ஆகிய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளிடம் ரூபாய் 1 கோடிக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார். நடிகர் சங்கத்திற்கு 1 கோடி வழங்கியுள்ள உதயநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார் தென்னெந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நடிகரும், தயாரிப்பாளருமான விஷால், "அன்புள்ள உதயா, எங்கள் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு உங்கள் பங்களிப்பிற்காகவும், முடிந்தவரை விரைவாக கட்டடம் கட்டும் பணிகளை முடிக்க உதவ முன்வந்ததற்காகவும் நண்பர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் தற்போதைய தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சரான உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் ஒரு அழகான செயல். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications