திமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக.. லண்டனிலிருந்து திரும்பிய உதயநிதி ஸ்டாலின்! பரபரக்கும் இளைஞரணி!
சென்னை: திமுக பொதுக்குழுவுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளில் பிஸியாக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
மகன் இன்பநிதியின் உயர் கல்வி தொடர்பாக லண்டன் சென்றிருந்த உதயநிது ஸ்டாலின், திமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக தனது பணிகளை துரிதமாக முடித்துக் கொண்டு சென்னை திரும்பிவிட்டார்.
லண்டனிலிருந்து சென்னை திரும்பிய பிறகு கடந்த 2 நாட்களாக தொடர்ந்து விசிட்டர்களை சந்தித்து வரும் அவர், இன்று தனது தொகுதியிலும் உலா வந்தார்.

இன்பநிதி மேற்படிப்பு
இன்பநிதியின் உயர்கல்வி தொடர்பாக குடும்பத்தினருடன் அண்மையில் லண்டன் புறப்பட்டுச் சென்றிருந்தார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அங்கு மகனை கல்லூரியில் சேர்ப்பது தொடர்பான பணிகளை உடனிருந்து கவனித்து வந்த அவர், 2 நாட்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினார். அதுவும் திமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காகவே தனது லண்டன் பணிகளை வேகமாக முடித்துவிட்டு ஊர் திரும்பினார் உதயநிதி ஸ்டாலின்.

தொடர்ந்து பிஸி
இதனிடையே திமுக புதிய நிர்வாகிகள் பலரும் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக அவரது அலுவலகத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதுமட்டுமல்லாமல் சினிமா தொடர்பான நண்பர்களும் அடுத்தடுத்து உதயநிதியை சந்திக்க வந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே இன்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி காவல் அதிகாரிகளை சந்தித்து அவர்களுடனும் உதயநிதி கலந்துரையாடி உள்ளார். இப்படி ஊருக்கு வந்தது முதலே தொடர்ந்து பிசியாகவே இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

ஸ்டாலின் பாணியில்
இது போதாதென்று சென்னை விங்ஸ் கன்வென்ஷன் செண்டரில் நடைபெறவுள்ள திமுக பொதுக்குழுவுக்கான முன்னேற்பாடுகள் பற்றியும் அவ்வப்போது கேட்டறிந்து வருகிறார். கருணாநிதி காலத்தில் இதேபோல் தான் கட்சியின் பெரிய நிகழ்ச்சிகள், மாநாடுகள், வெளியூர் பொதுக்குழு கூட்டத்தின் போது அதற்கான முன்னேற்பாடுகள் பற்றி ஸ்டாலின் ஆர்வமுடன் கேட்டறிந்ததோடு ஆலோசனைகளையும் நிர்வாகிகளுக்கு வழங்குவார். உதயநிதி ஸ்டாலினும் இப்போது அதே பாணியில் பணியாற்றி வருகிறார்.

ஸ்டாலின் வேட்புமனு
திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ள நிலையில் அந்த நிகழ்விலும் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். ஒன்றியம் தொடங்கி மாவட்டச் செயலாளர்கள் வரை உதயநிதியை சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக நேரம் கேட்டிருக்கும் நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு அந்த பணிகளில் பரபரப்பாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications