என் அமைச்சர் பதவி போனாலும் போராடுவேன்.. அடுத்து டெல்லிதான்.. நீட் உண்ணாவிரதத்தில் உதயநிதி ஆக்ரோஷம்
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக போராடினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும். தகுதி நீக்கம் செய்வார் என அதிமுகவினர் மிரட்டியதோடு புகார் கொடுத்துள்ளனர். அமைச்சர் பதவி போனாலும் கூட பரவாயில்லை நீட்டை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆக்ரோஷமாக பேசினார்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி உள்ளனர். தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவும் இன்னும் நிலுவையில் தான் உள்ளது.

இதற்கிடையே சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் தற்கொலை செய்தார். இதனால் மனமுடைந்த அவரது தந்தையும் உயிரை மாய்த்து கொண்டார்.
இந்நிலையில் தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறியும், நீட் குறித்த ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சை கண்டித்தும் இன்று திமுக சார்பில் மதுரையை தவிர்த்து மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர். திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் இன்று ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் தான் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். உண்ணவிரத போராட்டத்தின் இறுதியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் மத்திய பாஜக அரசையும், ஆளுநர் ஆர்என் ரவியையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இந்த வேளையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
நீட் தேர்வுக்கு எதிராக போராடினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும், தகுதி நீக்கம் செய்வார்கள் என்று அதிமுகவினர் சொன்னார்கள். எங்களுக்கு எதிராக அதிமுகவினர் புகார் கூட கொடுத்தனர். அமைச்சர் பதவி போனால் கூட பரவாயில்லை நீட்டை எதிர்த்து நான் போராடுவேன்.
நீட் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியிடம் கெஞ்சி கேட்டு கொள்கிறேன். நீங்கள் வாருங்கள். இல்லாவிட்டால் அதிமுக இளைஞர் அணி செயலாளர், மாணவர் அணி செயலாளரை அனுப்பி வையுங்கள். அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் டெல்லிக்கு சென்று பிரதமர் வீட்டு முன்பு உட்காருவோம். அப்படி நீட் தேர்வு ரத்தானால் முழு பொறுப்பையும் நீங்களே எடுத்து கொள்ளுங்கள். இதற்கு தயாரா?
மேலும் நீட் விவகாரத்தில் ஆளுரின் செயலை நாம் கண்டித்து இருக்கிறோம். அதிமுக கண்டித்தார்களா? ஏன் இந்த விஷயத்தில் மூச்சாவது விட்டார்களா? அதிமுகவினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை இரும்பு பெண்மணி என பெருமையாக பேசுகின்றனர். ஆனால் அவரை தலைவராக கொண்ட நீங்கள் பித்தளை, பிளாஸ்டிக் மனிதராக இருக்க வேண்டாமா? மோடியும், அமித்ஷாவும் பசைந்து வைத்த களிமண்ணாக தான் இருக்கீறீர்கள்.
சகோதரர் ராகுல் காந்தி உறுதி ஒன்றை அளித்துள்ளார். நீட் ரகசியத்தை சொல்லுங்க.. சொல்லுங்க.. என என்னிடம் கேட்கின்றனர். நீட் ரகசியத்தை இப்போது சொல்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை ஓடஓட விரட்டுங்க. நம்முடைய கூட்டணியை வெற்றி பெற வைத்து ஆட்சியில் உட்கார வைத்தால் நீட் ரத்தாகும். இதனை ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் இந்த போராட்டம் இத்துடன் நிற்காது. ஸ்டாலினிடம் அனுமதி பெற்று டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும்'' என முழங்கினார்.












Click it and Unblock the Notifications