உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்திருப்பது பதவி உயர்வு அல்ல!
சென்னை: தடகளப் பாதையில் ஒரு வீரர் ஓடும் விளையாட்டுகளின் வெற்றி தோல்வி என்பது அவருடைய உழைப்பை மட்டுமே சாரும். Relay Race என்பது ஒருவரை மட்டும் சார்ந்திருப்பதல்ல. தொடக்க வீரரிடம் இருந்து அடுத்தடுத்த வீரர்கள் சரியான நேரத்துக்குள் அடுத்தவரிடம் ஒப்படைத்தாக வேண்டும்.

கட்சி என்பது தலைவர் வழிநடத்தினாலும் அது ஒரு கூட்டுப் பொறுப்பு. அண்ணா, கலைஞர் Legacy யை காலம் மிக தாமதமாக மு க ஸ்டாலினுக்கு வழங்கியது. அந்த தாமதத்தை மு க ஸ்டாலின் தற்போது நேர் செய்திருக்கிறார்.
பாஜக- காங்கிரஸ் என தேசியக் கட்சிகளின் இரு துருவ அரசியலாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிற சூழலில், கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியில் வலுவான மாநிலக் கட்சியான திமுக தான் பயணிக்கப்போகிற வழியை இப்போதே முடிவு செய்திருக்கிறது.
ஒரு கட்சியின் அரசியல் வாரிசை வாக்காளர்கள் அங்கீகரிக்கவோ நிராகரிக்கவோ மட்டுமே முடியும். ஆனால் அரசியல் வாரிசை அடையாளம் காட்டவேண்டியது அந்தந்த கட்சிகளின் தலைவர்களே. அதிமுக தலைவர்கள் அதை செய்ய தவறியதாலேயே அந்த கட்சி இப்போதுவரை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. திமுக சரியான காலகட்டத்தில் தம்முடைய முடிவை அறிவித்து அதை அமல்படுத்தியும் இருக்கிறது.
கலைஞர் பேரன், முக ஸ்டாலின் மகன் என்பதெல்லாம் அந்த நாற்காலியை நெருங்குவதற்கு மட்டுமே உதவும். அதை தக்கவைக்கவும் 75 ஆண்டுகால பாரம்பரிய இயக்கத்தை வழிநடத்துவதும் அவ்வளவு எளிதானதல்ல.
முக ஸ்டாலின் மாதிரியான கடின உழைப்பாளியையே காலமும் கட்சியும் தாமதமாகவே கைகொண்டன. அந்த வகையில் உதயநிதிக்கு விரைவானதாக இருந்தாலும், கடினமான காலமாகவே இருக்கும்.
திராவிட அரசியலின் தமிழ்நாட்டு முகமாகப் பொறுப்பேற்க போகிற உதயநிதிக்கு சொல்வதற்கு ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. இந்த Relay Raceல் உங்களது ஓட்டம்தான் மிக நீண்டதாக இருக்கப் போகிறது. அது அவ்வளவு எளிதானதாக இருக்கப்போவதில்லை. இது பொறுப்போ பதவி உயர்வோ இல்லை. நூற்றாண்டுகளாக நடந்துவரும் ஒரு பெரும்போரில் உங்களை இப்போது தளபதியாக இறக்கிவிட்டிருக்கிறார்கள்.
கொள்கை சமரசமில்லாமல் தொடர்ந்து இயங்குங்கள். அதுபோதும். போர் தன்னைத்தானே நடத்திக் கொள்ளும். - எழுதியவர்- நெல்சன் சேவியர்.












Click it and Unblock the Notifications