வலிமை காட்ட பிரேமலதா விஜயகாந்த் வியூகம்! ‛உள்ளம் தேடி இல்லம் நாடி' சுற்றுப்பயணத்தை தொடங்கிய தேமுதிக
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தேமுதிக சார்பில் தொகுதி வாரியாக ‛உள்ளம் தேடி இல்லம் நாடி' னெ்ற பெயரில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சுற்றுப்பயணம் தொடங்கி உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தை, விஜயகாந்தின் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் வணங்கி தொடங்கி உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணியை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. திமுக சார்பில் ‛ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசாரம் மற்றும் உறுப்பினர் சேர்ப்பு தீவிரமாக நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் திமுகவினர் இந்த வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகின்றனர்.

அதேபோல் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடிபழனிச்சாமி ‛மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிச்சாமி இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு திமுக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
அதேபோல் ‛தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் மக்களை சந்தித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக தான் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். தேமுதிக தற்போது அதிமுக கூட்டணியில் உள்ளது. ஆனால் ராஜ்யசபா சீட் வழங்காததால் தேமுதிக அதிருப்தியில் உள்ளது.
மேலும் 3 நாட்களுக்கு முன்பு பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினார். இதனால் வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெற போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படியான சூழலில் தான் தேமுதிகவின் வலிமையை காட்ட பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்.
‛உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் பிரேமலதா விஜயகாந்த் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்த், தனது கணவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் தொண்டர்களுடன் மரியாதை செலுத்தி இந்த பயணத்தை தொடங்கினார். பிரேமலதாவின் சுற்றுப்பயணம் 2 பெயர்களில் நடைபெற உள்ளது. பூத் முகவர்களுடன் நேரடி சந்திப்புக்கு ‛உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. தொகுதி மககளுடன் சந்திப்புக்கு ‛கேப்டனின் ரத யாத்திரை' மக்களை தேடி மக்கள் தலைவர்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை 4 மணிக்கு இந்த பயணம் தொடங்கியது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் .உள்ள ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவிலில் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகள், மக்களை சந்தித்து வருகிறார். நாளை காலை 10 மணிக்கு ஆவடி மாநகர் மாவட்டம் ஆவடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இதையடுத்து நாளை மாலை 4 மணிக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி சட்டசபை தொகுதிக்குட்பட்ட தருத்தணி நகராட்சியில் மக்கள் சந்திப்பு நடத்தப்பட உள்ளது. பிறகு 5ம் தேி காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாநகர் மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டமும், மாலை 4 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம் சோழிங்கர் நகரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் மக்கள் சந்திப்பு நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications