ரேபிட் டெஸ்ட் கிட்களை அதிக விலைக்கு வாங்கவில்லை... உமாநாத் ஐ.ஏ.எஸ். திட்டவட்டம்
சென்னை: கொரோனா தொற்றை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்களை தமிழக அரசு அதிக விலை கொடுத்து வாங்கவில்லை என மருத்துவ கழக சேவை அதிகாரி உமாநாத் ஐ.ஏ.எஸ். திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் அதி தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகமானோருக்கு அதிவிரைவாக மேற்கொள்ள வேண்டி சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்க தமிழக அரசு ஆர்டர் கொடுத்துள்ளது.

இந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள் இன்னும் முழுமையாக தமிழகத்திற்கு வந்து சேராத நிலையில் அது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. கொரோனா பரிசோதனை கிட்களின் விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அது தொடர்பான விளக்கத்தை அளித்தார் மருத்துவ கழக சேவை அதிகாரி உமாநாத் ஐ.ஏ.எஸ்.

அப்போது அவர் கூறுகையில், ரேபிட் டெஸ்ட் கிட்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையில் தான் தமிழக அரசு ஆர்டர் கொடுத்ததாகவும், அதிக விலை கொடுத்து வாங்கவில்லை எனவும் தெரிவித்தார். அப்போது அவரை இடைமறித்த செய்தியாளர்கள், சத்தீஸ்கர் மாநிலத்தில் தென்கொரியா நிறுவனத்திடம் இருந்து ரூ.337 க்கு 75,000 டெஸ்ட் கிட்கள் வாங்கியது பற்றி கேட்டனர். மேலும், தமிழக அரசு எவ்வளவு விலைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியது எனவும் கிடுக்கிப்பிடி போட்டனர்.

ரேபிட் டெஸ்ட் கிட்களை பொறுத்தவரை தயாரிப்பு நிறுவனங்களின் தரத்தை பொறுத்து விலை மாறுபடக்கூடும் என்றும், எதிர்காலத்தில் சத்தீஸ்கரை விட குறைந்த விலைக்கு கூட வாங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் உமாநாத் தெரிவித்தார். மேலும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுவது முறையாக இருக்காது எனவும் கூறினார்.இதனிடையே ஒரு ரேபிட் டெஸ்ட் கருவியின் விலை ரூ 600-க்கு வாங்கப்பட்டதாக மருத்துவத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications