பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கோடிகளில் கொட்டிய வருவாய்.. பத்திரப்பதிவு செய்த சாதனை
சென்னை: தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் ரூ.274 கோடி அரசுக்கு வருவாய் ஈட்டியுள்ளது. இதுகுறித்து தமிழக பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பெருமிதம் தெரிவித்துள்ளார்.. அத்துடன் நேற்று ஒரே நாளில் அரசுக்கு கிடைத்த வருவாய் குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளார். இது பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் வீடு, மனை வாங்குபவர்கள், அதற்கான பத்திரங்களை முறைப்படி பதிவு செய்து கொள்வது அவசியமான ஒன்று..

வழக்கமாக சுப காரியங்கள் அனைத்தையும் முகூர்த்த தினங்களில் செய்வதால் வாங்கும் சொத்துகள் பல மடங்காகப் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.. எனவே, சொத்துக்களை வாங்குவோர் சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்..
கூடுதல் டோக்கன்கள்
இதன்காரணமாக முகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன் வழங்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறுவதால், பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறுகிறது.
அந்தவகையில் நேற்றைய தினமும் முகூர்த்த நாளாகும்.. நேற்று 4ம் தேதி ஆவணி மாதத்தின் கடைசி வளர்பிறை முகூர்த்தம் என்பதால், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முன்பதிவு வில்லைகள்
நேற்று 4ம்தேதி அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன..
அதாவது, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு, வழங்கப்பட்டன.
12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது. அதன்படியே தமிழகத்தின் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும், பொதுமக்கள் குவிந்து ஆர்வத்துடன் பத்திரங்களை பதிவு செய்து கொண்டனர்.
ஒரே நாளில் ரூ.274.41 கோடி
இதையடுத்து, நேற்று ஒரே நாளில் அரசுக்கு இதுவரையில் இல்லாத ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்..
ஆவணி மாத சுபமுகூர்த்த தினமான நேற்று செப்டம்பர் 4ம் தேதி, கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம் பதிவுத்துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது..
முன்னதாக இந்த நிதியாண்டில் கடந்த 30.4.2025 அன்று பதிவுத்துறையின் ஒரே நாளில் அரசுக்கு 272.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டிருந்த நிலையில், அந்த வருமானத்தை நேற்றைய வருவாய் முறியடித்து சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பதிவுத்துறை, வணிகவரித்துறை சபாஷ்
சமீபத்தில் நடந்த தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் வணிகவரித் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு அமைச்சர் மூர்த்தி பதிலளித்து பேசும்போது சில முக்கிய விஷயங்களை அவையில் பகிர்ந்து கொண்டிருந்தார்..
அதில், "கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வணிகவரித் துறை மொத்தமாக ஈட்டியுள்ள வரிவருவாய் ரூ.6.87 லட்சம் கோடியாகும். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் இதுவரை ரூ.5.08 லட்சம் கோடி வருவாயை இந்த துறை ஈட்டியுள்ளது.
அதேபோல், பதிவுத் துறையில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக் காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் ரூ.88,844 கோடியாகும். ஆனால், இந்த 4 ஆண்டுகளில் மட்டும் இதுவரை ரூ.72,004 கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது.
மொத்தத்தில் தமிழக வணிக வரித்துறையும், பதிவுத்துறையும் சேர்ந்து மொத்தமாக, 5.80 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டி சாதனை படைத்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் கூறியிருந்த நிலையில், பதிவுத்துறையின் வருவாய், தொடர்ந்து சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications