இது லிஸ்டுலேயே இல்லையே.. சென்னையில் முக்கிய இடத்தில் வரும் பெரிய மால்.. எந்த ஏரியா தெரியுமா?
சென்னை: சென்னையில் மீண்டும் பல இடங்களில் வணிக வளாகங்கள் (மால்) கட்டப்பட்டு வருகின்றன. ஒரு நகரத்தில் மக்கள் வர்த்தகம் அதிகரிக்கும்போது, வணிக வளாகங்களின் வருகை அதிகரிப்பது இயல்பு. இது ஒரு வகையில் மக்களின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது. கடந்த 10 வருடங்களாக சென்னையில் பெரிய அளவில் வணிக வளாகங்கள் கட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் புதிய வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அவற்றில், மால் ஆஃப் மெட்ராஸ் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரம்பூர் எஸ்.பி.ஆர் சிட்டியில் இந்த மால் அமைய உள்ளது. 1.2 மில்லியன் சதுர அடியில் உருவாகும் இந்த மாலில் 300 கடைகள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மால் ஆஃப் மெட்ராஸ்
12 பெரிய கடைகள் (ஆங்கர் ஸ்டோர்ஸ்) அமைய உள்ளன. அதேபோல், 9 திரைகள் கொண்ட பி.வி.ஆர் மல்டிபிளக்ஸ் சினிமா தியேட்டரும் வர இருக்கிறது. இரண்டு ஏக்கர் பரப்பளவு சென்ட்ரல் பிளாசா மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்பட உள்ளது. மூன்று நிலைகளில் 1,500 கார்கள் வரை நிறுத்தக்கூடிய பார்க்கிங் வசதியும் இங்கு உள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, சென்னை அசோக் நகரில் பெரிய வணிக வளாகம் ஒன்று வர உள்ளது. அசோக் நகர் பகுதியில் 22 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இடையில் நிறுத்தப்பட்டிருந்த இதன் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு, தற்போது 17 மாடிகளைக் கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
பெரிய மால் வருது
இந்த வணிக வளாகத்தை தமிழ்நாடு அரசின் ஹவுசிங் போர்டு கட்டுகிறது. ஒயின் கிளாஸ் வடிவில் தோன்றும் இந்த 22 மாடி கட்டிடம், அசோக் பில்லர் ட்ரை-ஜங்ஷன் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில், 24,000 சதுர அடி வணிக வளாகத்துக்காக ஒதுக்கப்படும். மீதமுள்ள பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். ஒவ்வொரு குடியிருப்பும் 1,700 சதுர அடி பரப்பளவில் இருக்கும். 2.13 ஏக்கர் நிலத்தில் கட்டப்படும் இந்த முழு கட்டமைப்புக்கும் 227.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த கட்டுமானத்தில் 10 மாடிகள் வரை கட்டப்பட்டுள்ளன. இது ட்வின் டவர் என்பதால், மற்றொரு டவரும் கட்டப்படவுள்ளது. மீதமுள்ள மாடிகளின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு வணிக வளாகம் வருவதால், உதயம் திரையரங்கின் வியாபாரம் பெரிய அளவில் இருக்காது. இந்த நிலையில், சென்னையின் பிரபலமான திரையரங்குகளில் ஒன்றான உதயம் திரையரங்கம் மூடப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இங்கே வரப்போகும் புதிய திட்டம் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.
உதயம் திரையரங்கம் பழைய சென்னையின் அடையாளங்களில் ஒன்று. தற்போது அந்த திரையரங்கம் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.
இங்கு 25 மாடி கட்டிடம் கட்டப்படவுள்ளது. அலுவலகம் மற்றும் குடியிருப்பு பாணியில் இந்த கட்டிடம் கட்டப்படவுள்ளது. ஏற்கனவே, சென்னையில் பல பழைய ஹோட்டல்கள் மற்றும் இடங்கள் வாங்கப்பட்டு, உயரமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அதேபோல, உதயம் திரையரங்கும் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் காரணமாக, அங்கு ஓடிக்கொண்டிருக்கும் கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications