மொத்த தென்னிந்தியாவிற்கு ஒதுக்கிய நிதியை விட.. உத்தர பிரதேசத்திற்கு அதிகம் ஒதுக்கீடு.. பட்ஜெட் ஷாக்
சென்னை: 2024 இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு மொத்தமாக தென்னிந்தியாவிற்கு ஒதுக்கிய நிதியை விட உத்தர பிரதேசத்திற்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளது விமர்சனங்களை சந்தித்துள்ளது.
நேற்று புதிய நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். 55 நிமிடம் அவர் பட்ஜெட் உரையில் பேசினார். இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அறிவிப்புகள் வெளியாகவில்லை.

மோடி பிரதமரான பின்னர் 600 பில்லியன் டாலர் அளவுக்கு நேரடி அந்நிய முதலீடு வந்துள்ளது; இடைக்கால பட்ஜெட்டின் மொத்த வருவாய் 30.8 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பு. அதில் நிதிப் பற்றாக்குறை 5.8%; நாட்டின் மொத்த கடன் 14லட்சம் கோடியாக உள்ளது;
இந்த பட்ஜெடடில் ஒதுக்கப்பட்ட நிதி திட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 49 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவிற்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆந்திர பிரதேசத்திற்கு 49 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. கேரளாவிற்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானாவிற்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மொத்தமாக ஒரு பிராந்தியத்திற்கே 1.95 லட்சம் கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் உத்தர பிரதேசம் என்ற ஒரே ஒரு மாநிலத்திற்கு 2.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் செய்யப்பட்டு உள்ள இந்த ஒதுக்கீடு நியாயமற்றது, முக்கியமாக இது ஓரவஞ்சனை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
ஏற்கனவே பல்வேறு ரயில் திட்டங்கள் தொடங்கி சாலை திட்டங்கள் வரை வட மாநிலங்களுக்கு தென் மாநில நிதியில் செய்யப்படும் நிதியில் இந்த பாரபட்சமான நிதி ஒதுக்கீடு விமர்சனங்களை சந்தித்துள்ளது.
பட்ஜெட்: நேற்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கியமான சில விஷயங்கள் பின்வருமாறு. 9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள்.
நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும். 517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும்; 1000 விமானங்கள் புதிதாக வாங்கப்படும்
40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்திற்கு உயர்த்தப்படும். மேலும் சில நகரங்களுக்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும். இதனால் மக்களின் பயணம் எளிதாகும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தியாவில் இவி வாகனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் நிதி அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஊழல் எதிர்ப்புக்கும், வாரிசு அரசியலுக்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. பாஜகவுக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என நம்பிக்கை உள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோது ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். தற்போது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு, முத்தாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது.
வருமான வரி விதிக்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை. நிறுவனங்களுக்கான வரி 22% மாக குறக்கப்பட்டுள்ளது. கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப பெறுவதற்கான கால அளவு 2013ல் 94 நாட்களாக இருந்தது. தற்போது 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications