Union Budget 2026: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஜாக்பாட்.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பல முக்கிய அறிவிப்புகளை இன்றைய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். குறிப்பாக தனிநபர் முதலீட்டு வரம்பு 5 சதவிகிதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2026 - 27 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

10 சதவீதம் ஆக அதிகரிப்பு
அதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் தனிநபர்கள் போர்ட்ஃபோலியோ முதலீட்டு திட்டம் (Portfolio Investment Scheme) மூலம் ஈக்விட்டி (பங்குகள்) முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படும். தனிநபர் முதலீட்டு வரம்பு 5% இலிருந்து 10% ஆக உயர்த்தப்பட உள்ளது.
அதே நேரத்தில், இவ்வகை முதலீட்டாளர்கள் அனைவருக்கும் பொருந்தும் மொத்த வரம்பு 10% இலிருந்து 24% ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், வெளிநாட்டில் வசிக்கும் தனிநபர் முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களில் அதிக பங்குகளை பெற முடியும்.
டிசிஎஸ் வரி குறைக்கப்படும்
இதன் காரணமாக பங்கு விலை நிர்ணயம் மேம்படும். பங்குரிமையை ஆழப்படுத்தும். மேலும் நீண்டகால மூலதன உருவாக்கத்திற்கு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று வெளிநாட்டு சுற்றுலாத் திட்டங்கள் (overseas tour program package) விற்பனை மீதான டிசிஎஸ் வரியானது, தற்போது இருக்கின்ற 5 சதவீதம் மற்றும் 20 சதவிகிதத்தினை எந்தவித தொகை வரம்பும் இன்றி 2 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தார்.
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்பு குறித்து கிரீன் போர்ட் ஃபோலியோ இணை நிறுவனரும், ஃபண்ட் மேலாளருமான திவம் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், " வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சி, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மற்றும் நடவடிக்கையாகும்.
போர்ட்போலியா முதலீட்டு திட்டத்தின் கீழ் விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. அதேபோல, ஒட்டுமொத்தமாக கையிருப்பு வரம்பையும் உயர்த்தியுள்ளது. இதனால், இந்தியாவின் வளர்ச்சி விவகாரத்தில் உலகளாவிய இந்தியர்களும் நேரடியாக முதலீடு செய்ய முடியும்.
நீண்ட கால மூலதனமாக இருக்கும்
மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா, ஐரோப்பா, தென்கிழக்கு நாடுகளில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நிலையில், பட்ஜெட்டில் வெளியாகியிருக்க கூடிய இந்த அறிவிப்பு அவர்களுக்கும் பலனளிக்கும் என்றும் இந்திய இந்தியாவின் பொருளாதாரப் பாதைக்கு ஏற்ற நீண்ட கால மூலதனமாக இது இருக்கும்" என்றும் கூறினார்.
நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டில் அறிவித்துள்ள சலுகையானது வெளிநாடு வாழ் இந்தியர்கள், பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம் மூலதன பங்குகள் மதிப்பு உயரும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவோடு கொண்டுள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகவும் இது அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications