தமிழகத்துக்கான ரூ.573 கோடியை நிறுத்திய மத்திய அரசு.. புதிய கல்வி கொள்கையை ஏற்காததே காரணம்? பின்னணி
சென்னை: ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை என்பது செயல்படுத்தப்படவில்லை என்பதால் மத்திய அரசு இந்த நிதியை நிறுத்தி வைத்துள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மத்திய அரசு சார்பில் தேசிய கல்வி கொள்கை என்பது செயல்படுத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டில் கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. இதனால் மத்திய அரசின் கல்வி கொள்கையில் திருத்தம் கொண்டு வரும்போது அதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் கல்வி குழு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின்படி 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 29ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் 34 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கல்விக்கொள்கை முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த கல்வி கொள்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு வரையில், தாய்மொழி, உள்ளூர் மொழி, பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும். 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு முறை தொடரும். ஆனால், முழுவளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் மும்மொழி கொள்கை, தொழில்கல்வி அறிமுகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இந்த புதிய கல்வி கொள்கை தமிழக அரசு ஏற்கவில்லை. இந்த கல்விக்கொள்கையை ஆராய குழு ஒன்று தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு புதிய கல்வி கொள்கையை ஆராய்ந்து வருகிறது. இந்த குழுவின் அறிக்கையை தொடர்ந்து தான் புதிய கல்வி கொள்கை விஷயத்தில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்க உள்ளது. இதற்கிடையே தான் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்தாமல் உள்ள தமிழக அரசுக்கு மத்திய அரசு சார்பில் வழங்க வேண்டிய நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha Scheme) படி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும். அந்த வகையில் ஆண்டின் மொத்த செலவான ரூ.3586 கோடியை மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன. அந்த வகையில் பார்த்தால் மொத்தமுள்ள ரூ.3,586 கோடியில் தமிழகத்திற்கு மத்திய அரசு மொத்தம் ரூ.2152 கோடி வழங்க வேண்டும்.
இதில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்காமல் நிறுத்தி வைத்தது. இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அதேபோல் தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தியிடம்அன்பில் மகேஷ் தெரிவித்து இருந்தார். தமிழக அரசு சார்பிலும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு இருந்தது.
ஆனாலும் மத்திய அரசு சார்பில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கான முதல் தவணை தொகையான ரூ.573 கோடி என்பது ஒதுக்கீடு செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு செயல்படுத்தாதது தான் என கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதோடு, தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது மற்றும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications