"பிளாக்மெயில் செய்யும் மத்திய அரசு.. கையெழுத்து போட்டால் தான் நிதி என்கிறார்கள்!" அன்பில் மகேஷ் பரபர
சென்னை: மும்மொழிக் கொள்கையை மற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொண்ட போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் வரை நிலுவையில் உள்ள கல்வி நிதி அளிக்கப்படாது என்று தர்மேந்திர பிரதான் கூறியதற்கும் கண்டனம் எழுந்துள்ளன.
இதனிடையே தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலிடனுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன்பின் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் என்ன என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட தோழமைக் கட்சிகள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடின்றி, மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யக் கூடாது. எந்த அரசாக இருந்தாலும் நிதியை விடுவிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் துறையின் அமைச்சர் என்ற ரீதியில் நன்றியை கூறிக் கொள்கிறேன்.
2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய நிதி மட்டும் ரூ.2,152 கோடி. திடீரென சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியை கொடுக்க வேண்டுமென்றால் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே கொடுப்போம் என்று சொல்கிறார்கள். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை 2 முறை நேரில் சென்று சந்தித்தேன். ஒரு முறை அவரின் வீட்டிற்கே சென்று சந்தித்தேன்.
மற்றொரு முறை நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் சந்தித்தோம். அப்போது அவர், நீங்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் என்ன? ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் கல்வித்துறையில் சிறப்பாக செயல்படுகிறீகள். ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு மாடலை இந்தியா முழுக்க பின் தொடர வேண்டும் என்று சொல்வேன்.
அவரின் பேச்சு மிகவும் பாராட்டும் வகையில் ஊக்கப்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, இதில் கையெழுத்து போடுங்கள்.. அடுத்த அரைமணி நேரத்தில் நிதியை விடுவிக்கிறேன் என்று சொல்வது, முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்வதை போல் பிளாக்மெயில் செய்யும் தோரணையில் இருப்பதாகவே பார்க்கிறேன்.
இந்த பணம் வராததால், 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் சிக்கலில் உள்ளது. தமிழ்நாட்டில் இடைநிற்றல் இருக்க கூடாது என்று செயல்பட்டு வருகிறோம். ஆனால் நிதியை நிறுத்தி வைப்பதன் மூலமாக 32 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். நிதியை நிறுத்துவதன் மூலம் மாணவர்களை வஞ்சிக்க கூடிய அரசாகவே இருக்கிறது.
இந்த செய்தி வந்த அடுத்த நிமிடமே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து அழைப்பு வந்தது. உடனடியாக சென்னை வந்து இந்த விவகாரம் தொடர்பான விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பெறுவதற்கு அடுத்தக் கட்டமாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடந்துள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications