மத்திய அரசு கூறியதால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை: அமைச்சர் சேகர் பாபு விளக்கம்! வாயடைத்த பாஜக
சென்னை: மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில்தான், விநாயகர் சதுர்த்திக்கு தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை, பொது இடங்களில் கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று அரசு சமீபத்தில் அறிவுறுத்தியது.
இந்த நிலையில் இந்த விவகாரம் இன்று சட்டசபையில் எதிரொலித்தது.

நாகர்கோவில் எம்எல்ஏ காந்தி
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது சரி கிடையாது.. அனைவரும் கூடி கொண்டாடுவதற்கு தளர்வுகளுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ காந்தி பேரவையில் இன்று வலியுறுத்தினார். இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் காந்தி இவ்வாறு கூறினார்.

மத்திய உள்துறை செயலாளர் சுற்றறிக்கை
இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதித்து கொண்டாடப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார். எனவே, மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் தான் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு வலியுறுத்தல்
கொரோனா பரவலை தடுக்க, திருவிழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. அதையேற்றுதான் நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
Recommended Video

திமுக அரசு
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு திமுக அரசு தடைவிதித்து விட்டதாக பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசுதான் இதுபோன்ற ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பாஜக பிரச்சாரம்
அரசியல் ரீதியாக பாஜக இதற்கு எந்த மாதிரி எதிர்வினையாற்ற போகிறது என்று தெரியவில்லை. ஏனென்றால் இதுவரை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் திமுக அரசுதான் இதற்கு தடை விதித்தது என்று பாஜக தரப்பு தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications