தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சீங்க? ஸ்டாலின் சேலஞ்ஜ்.. ரூ.2.47 லட்சம் கோடி! வேலூரில் பதிலளித்த அமித்ஷா
சென்னை: கடந்த 9 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்த சிறப்பு திட்டங்களின் பட்டியலை வெளியிட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் வேலூர் கூட்டத்தில் அமித்ஷா பேசி உள்ளார்.
சேலம் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், நேற்று திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அதில் "நாடு முழுவதும் நாளுக்கு நாள் பாஜகவின் செல்வாக்கு சரிவடைந்துகொண்டே வருகிறது. அவர்கள் அந்த ஆத்திரத்தில் எந்த முடிவையும் எப்போது வேண்டுமானாலும் எடுப்பார்கள்.

அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்ட தோல்வியை மீண்டும் சந்தித்தால் நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த முன் வரலாம். பாஜக முழுமையாக தேய்ந்து போவதற்கு முன் அவர்கள் தேர்தலை நடத்த முயலலாம். எனவே இப்போதே நாம் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வருகிறார் என்று 2 நாட்களாக பத்திரிகைகளில் செய்தி. பாஜகவினுடைய பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேச இருக்கிறார் என்று வந்துகொண்டு இருக்கின்றன. இதற்கு என்ன காரணம்? அவர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவதையே இது காட்டுகிறது.
உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா அவர்கள், மத்திய பாஜக அரசு கடந்த 9 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டுக்கு செய்து கொடுத்த சிறப்பு திட்டங்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். தேர்தலில் பேச உள்ளீர்கள். பத்திரிகைகளில் பேட்டி அளிக்க போகிறீர்கள். செயல் வீரர்கள் கூட்டத்திலும் கலந்துகொள்வீர்கள்.
தமிழ்நாட்டுக்கு இந்த 9 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறோம் என்று சொல்வதற்கு அமித்ஷா தயாராக உள்ளாரா? இந்த கேள்வியைதான் நான் முன்வைக்கிறேன். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸுடன் இணைந்து இதே திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி ஆட்சியில் இருந்தது. தமிழ்நாட்டுக்கு அப்போது ஏராளமான சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன." என்றார்.
இந்த நிலையில் இன்று வேலூரில் நடைபெற்ற பாஜகவின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சர் ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார். அவர் ஆற்றிய உரையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 3 வது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமையும்.
உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் பெருமை உயர்ந்து உள்ளது. தமிழர்களின் சின்னமான செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்து பாஜக அரசு சாதனை படைத்து இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியின் தொன்மைக்கு சிறப்பு செய்தவர். எந்த மாநிலத்துக்கு சென்றாலும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியை பேச மறந்து உள்ளாரா?
23 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்து அனைத்து மாநில மக்களும் படிக்க வழி செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தை நடத்தி சிறப்பு சேர்த்தவர் பிரதமர் நரேந்திர மோடி. தமிழ்நாட்டுக்கு 9 ஆண்டு கால ஆட்சியில் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி பிரதமர் நரேந்திர மோடி கொடுத்து இருக்கிறார்." என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications