கவலையா இருக்கு! இந்தியாவை திமுக 2-ஆ பிரிக்க பார்க்குது! அமித் ஷா குரலில் மாற்றம்! லோக்சபாவில் சுளீர்
சென்னை: சிலர் இந்தியாவை இரண்டாக பிரிக்க பார்க்கிறார்கள்.. நாடாளுமன்றத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் வடக்கு தெற்கு என நம் நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார்கள் என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி உள்ளார். திமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் சட்டசபையில் பேசினார்.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. சொல்லப்போனால் திமுகவின் எதிர்ப்பே நாடு முழுக்க தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீயை பற்ற வைத்தது. நேற்று நாடாளுமன்றத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் எம்பி ஆ ராசா இதை எதிர்த்து மிக கடுமையாக பேசினார். அவரின் ஒவ்வொரு வார்த்தையும் அவையில் பரபரப்பை ஏற்படுத்தின.

நேற்று ஆ. ராசா பேசுகையில், 1971 பாகிஸ்தான் போரின் போதும், 1999 கார்கில் போரின் போதும், கோடிக் கணக்கில் நிதி அளித்த கட்சி திமுக. தேசியவாதம் பற்றி எங்களுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. மாநில சுய ஆட்சியை மதிக்காமலும், ஹிந்தி-சமஸ்கிருதத்தை எப்போதெல்லாம் திணிக்க முயற்சி செய்கிறீர்களோ, அப்போதெல்லாம் எங்களின் அடையாளத்தை பாதுகாக்க மட்டுமே குரல் கொடுக்கிறோம் என்று திமுக எம்.பி. ஆ.ராசா காட்டமான பதிலடி கொடுத்தார்.
அதேபோல் இன்று திமுக துணை பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சனம் செய்து இன்னும் கடுமையாக பேசினார்.
அமித் ஷா பேச்சு
இந்த நிலையில்தான் நாடாளுமன்றத்தில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா.. திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். அதில், இந்தியாவை இரண்டாக பிரிக்க சிலர் பார்க்கிறார்கள்.. நாடாளுமன்றத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் வடக்கு தெற்கு என நம் நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார்கள். 1972-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் 'தொகுதி மறுவரையறை' சட்டத்தைக் கொண்டு வந்தது. அப்போதுதான் மக்களவை இடங்களின் எண்ணிக்கை 525-லிருந்து 545-ஆக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, 1976-ல் நெருக்கடி நிலை காலத்தில் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள, 42-வது சட்டத்திருத்தத்தின் மூலம் தொகுதி மறுவரையறைக்குத் தடையை விதித்தது அதே காங்கிரஸ் அரசுதான்.
அன்று நாட்டு மக்களின் உரிமையைப் பறித்தது காங்கிரஸ்; இன்று அதே தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மீண்டும் முட்டுக்கட்டைப் போட்டு, மக்களை வஞ்சிப்பதும் அதே காங்கிரஸ் கட்சிதான். தொகுதி மறுவரையறை ஆணையத்தின் விதிகளிலோ அல்லது அதன் உருவாக்கத்திலோ எந்த மாற்றமும் செய்யவில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் என்ன நடைமுறை இருந்ததோ, அதேதான் இப்போதும் தொடர்கிறது.மக்களவை இடங்களின் எண்ணிக்கை கூடினால் தென்னகத்தின் பலம் குறைந்துவிடும் என ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். ஆனால், உண்மையான கணக்கைப் பாருங்கள்... தற்போதுள்ள 543 இடங்களில், தென்னிந்தியாவிலிருந்து 129 எம்.பி-க்கள் உள்ளனர். இது மொத்த விகிதத்தில் 23.76 %
புதிய நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்குப் பிறகு, தென்னகத்தைச் சேர்ந்த 195 எம்.பி-க்கள் அவையில் அமர்வார்கள். அப்போது தென்னகத்தின் பலம் 23.87 %-ஆக இருக்கும். இதில் அதிகாரம் எங்கே குறைகிறது? மாறாக, தென்னகத்தின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கவே செய்கிறது! வளர்ச்சி அடைய வேண்டிய நேரத்தில் முட்டுக்கட்டை ஏற்படுவது வருத்தமாக இருக்கிறது.
இந்தியாவை வடக்கு தெற்கு என இரண்டாகப் பிரித்து பேசுவது அதிகரித்திருந்ததை பார்த்து நான் கவலை அடைந்தேன்.. எங்களைப் பொறுத்தவரை எந்த பிரிவினையும் கிடையாது வடக்கிற்கு என்ன சலுகைகள் இருக்கிறதோ என்ன அதிகாரம் இருக்கிறதோ அதுதான் தெற்கிருக்கும் கிடைக்கும் லட்ச தீப போன்ற யூனியன் பிரதேசங்களுக்கும் கூட அதிகாரத்தில் எந்த குறைவும் இருக்காது என்று திமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் சட்டசபையில் பேசினார். அதற்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்












Click it and Unblock the Notifications