இந்தியாவின் ஒற்றுமைக்கே.. இந்தி தான் ரொம்ப முக்கியம்! மீண்டும் பரபரப்பை கிளப்பிய மத்திய அமைச்சர்
சென்னை: இந்தி திவாஸ் நாள் கொண்டாடத்தின் போது, தர்மேந்திர பிரதான் கூறிய கருத்துகளைப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்றைய தினம் இந்தி திவாஸ் நாள் எனப்படும் இந்தி மொழி நாள் கொண்டாடப்பட்டது. இதற்காக மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து இருந்தது.
இருப்பினும், இதற்கு கர்நாடகா, தமிழ்நாடு என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது. இதையெல்லாம் தாண்டி இந்தி மொழி நாள் கொண்டாடப்பட்டது.

இந்தி
இதற்கிடையே நேற்றைய தினம் இந்தி மொழி நாள் கொண்டாட்டத்தின் போது, மத்திய அமைச்சர்கள் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் நமது இந்திய விவகாரங்களில் இந்தியைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம் என்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டு உள்ளார். இந்தி திணிப்பிற்கு எதிரான முழக்கங்கள் தென் மாநிலங்களில் அதிகரித்து உள்ள நிலையில், அமைச்சரின் இந்த கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தர்மேந்திர பிரதான்
இது தொடர்பாக இந்தியில் ட்வீட் செய்துள்ள தர்மேந்திர பிரதான், "பல பேச்சுவழக்குகளை உள்ளடக்கிய இந்தி மொழி, இந்தியாவை ஒருமைப்பாட்டைப் பிணைப்பதில் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இன்றும் உலகின் பல மொழிகளில் ஹிந்தி வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் ஹிந்தி நாள் வாழ்த்துகள். நமது தாய்மொழியுடன் இந்தியை உயர்த்துவதில் பங்களிப்பு அளிப்போம் என உறுதிமொழி ஏற்போம்.

ஒற்றுமை
நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு, தேசிய நடைமுறையில் இந்தியைப் பயன்படுத்துவது முற்றிலும் அவசியம் என்று நமது அரசியலமைப்பு உருவாக்குபவர்கள் தெளிவான கருத்தைக் கொண்டிருந்தனர். அதன் பரந்த தன்மை மற்றும் பெருந்தன்மை காரணமாக, இந்தி நம் நாட்டின் ஜனநாயக அமைப்புக்குத் துணையாக இருக்கும்.

முக்கிய பங்கு
ஒட்டுமொத்த தேசத்தின் இணைப்பு மொழியாக இருப்பதன் மூலம், ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைப்பதில் ஹிந்தி தனது முக்கிய பங்கை ஆற்றி வருகிறது. அதிகாரப்பூர்வ பணிகளில் இந்திய ஒன்றியத்தின் தேசிய மொழிக் கொள்கையுடன் இணங்குவது ஒவ்வொரு அரசு அதிகாரி மற்றும் ஊழியரின் அரசியலமைப்பு கடமையாகும்.

உறுதிமொழி
நமது உத்தியோகபூர்வ பணிகளில் இந்தியை மேலும் மேலும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உலக அறிவியலின் வளமான மொழியாக இந்தியை நிலைநாட்டுவோம் என்று உறுதிமொழி எடுப்போம்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இந்தி திணிப்பிற்கு எதிராக பல்வேறு மாநிலங்களும் பேசத் தொடங்கி உள்ள நிலையில், அமைச்சரின் இந்தக் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின்
இதற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது இந்தியா. அதனை 'ஹிந்தி'யா என்ற பெயரில் பிளவுபடுத்திப் பார்க்கும் முயற்சிகள் வேண்டாம் என்று குறிப்பிட்ட அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின். சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் சாடினார்.












Click it and Unblock the Notifications