தமிழ்நாட்டில் இன்று முதல் 38 ரயில்கள்.. கூடுதல் நிறுத்தங்களில் நின்று செல்லும்.. எல்.முருகன் தகவல்!
சென்னை: தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று, இன்று (ஆகஸ்ட் 18) முதல் 38 ரயில்கள், கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகன், "விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் கூடுதல் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மனுக்கள் மக்களிடமிருந்து எனக்கு வந்தன. நான் அதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் கவனத்துக்கு கொண்டு சென்றதை தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில் 38 ரயில்கள் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கூடுதல் நிறுத்தங்களில் ரயில்கள் நின்று செல்லும்
இந்த அறிவிப்பின்படி சென்னை சென்ட்ரல் - ஷிவமோகா வாராந்திர அதிவிரைவு ரயில் (12691) ஆம்பூரில் நின்று செல்லும். ஷிவமோகாவிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை (12692) மறு மார்க்கத்திலும் இந்த ரயில் ஆம்பூரில் நின்று செல்லும். அதேபோல தன்பாத்- ஆலப்புழா விரைவு ரயில் (13351) குடியாத்தம், வாணியம்பாடியில் தலா இரண்டு நிமிடங்கள் நிற்கும்.
கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயில் (16322) இருகூர் மற்றும் சிங்காநல்லூரில் நின்று செல்லும். இந்த ரயில் மறு மார்க்கத்திலும் (16321) மேற்கூறிய ரயில் நிலையங்களிலும், கூடுதலாக மேலப்பாளையத்திலும் நின்று செல்லும். புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில் (16861), பயணிகளின் வசதிக்காக வள்ளியூரில் நின்று செல்லும்.
ரயில்வே நிதி
தேசிய நெடுஞ்சாலை, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களை மேம்படுத்துவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 2025-26-ல் மாநிலத்தின் ரயில்வே திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.6,626 கோடி வழங்கியுள்ளது. கடந்த 2009-2014 ஆண்டுகளுக்கு இடையே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இந்த ஒதுக்கீடு ரூ.879 கோடியாக இருந்தது.
ரயில்வே திட்டங்களுக்காக கடந்த ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டதை விட தற்போது தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் தொகை 654 சதவீதம் அதிகம். அமிர்த பாரத ரயில் நிலையங்கள் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2,948 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 77 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
எழும்பூர் ரயில் நிலையம்
இந்தத் திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காட்பாடி மற்றும் சேலம் ரயில் நிலையங்களை புனரமைக்கும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
2,587 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய தண்டவாளங்களை அமைக்கும் பணிகள் 33,467 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.10 புதிய ரயில் பாதைகள், 3 அகல ரயில் பாதைகள் 9 இரட்டை வழி பாதைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் மேம்பாலச்சாலை திட்டப்பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications