அவரே சொல்லிட்டாரே.. அப்புறம் என்ன? அதிமுக-பாஜக கூட்டணியில் பிரச்சனையா? புல்ஸ்டாப் வைத்த எல் முருகன்
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணியில் பிரச்சனை இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் சில நாட்களாக அந்த நிலைமை அப்படியே மாறியது. இந்நிலையில் இன்று மத்திய இணையமைச்சர் எல் முருகனிடம் அதிமுக-பாஜக கூட்டணியில் பிரச்சனை நிலவுகிறதா? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் நடந்த சம்பவத்தை கூறி விளக்கம் அளித்து அதிமுக-பாஜக இடையேயான பிரச்சனை தொடர்பான கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. இந்நிலையில் தான் சமீபகாலமாக இருகட்சிகளின் கூட்டணியில் பிரச்சனை இருப்பதாக தகவல்கள் பரவின. மேலும் இருகட்சிகளின் தலைவர்கள் பொதுவெளியில் கூறிய சில கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தின.
குறிப்பாக திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. என அண்ணாமலை நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து தொண்டனாக பணியாற்றுவேன் என அண்ணாமலை தெரிவித்ததாக பரவிய தகவல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அமித்ஷா சொன்ன பாயிண்ட்
இதுதொடர்பாக அதிமுக தலைவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டபோது அவர்களும் காட்டமாக பதிலளித்தனர். இதனால் அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி பிரிவை நோக்கி செல்வதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் சமீபத்தில் ஆங்கில சேனல் நடத்திய நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்றபோது தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணியாக உள்ளது என கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி கூறியது என்ன?
இதன் தொடர்ச்சியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. இந்த கூட்டணி தொடர்கிறது என தெரிவித்தார். இந்நிலையில் தான் இன்று சென்னை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அதேபோல் நிர்மலா சீதாராமனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்பட முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசினர்.

எல் முருகன் பத்திரிகையாளர் சந்திப்பு
இதையடுத்து சென்னையில் இன்று மத்திய இணையமைச்சர் எல் முருகன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எல் முருகன் பதிலளிக்கையில், ‛‛அதிமுக -பாஜக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் தான் சலசலப்புகள் உள்ளன. அதிமுக உடனான கூட்டணி பற்றி உள்துறை அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார். மேலும் மாநில தலைவர், நானும் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என கூறியுள்ளோம். அதிமுக பாஜக கூட்டணி தொடர்வதாக அதிமுக தலைவரும்(அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி) கூறியுள்ளார்'' என்றார்.

அண்ணாமலை பேச்சில் சர்ச்சையில்லை
இதையடுத்து பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என கூறியுள்ளாரே? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எல் முருகன் கூறுகையில், ‛‛நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில தலைவர் சில கருத்துகளை எடுத்துரைப்பார். கட்சி வளர்ந்து வருகிறது என கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில தலைவர் பேசுவதில் எந்த தவறும் இல்லை. கூட்டணி பற்றி நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை. அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளதாக அண்ணாமலை அவர்களே கூறியுள்ளார்'' என்றார்.












Click it and Unblock the Notifications