இதெல்லாம் நல்லதுக்கில்லை.. முதன்முறையாக பாஜகவை எதிர்த்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம்! பரபர பாலிடிக்ஸ்.!
சென்னை: தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது பலத்த கண்டனங்களை பெற்றுள்ளது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் பாஜக கூட்டணியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து இருக்கிறார். மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால் தான் நிதி ஒதுக்கீடு என்ற முடிவை கைவிடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது அதனால் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது எனக் கூறியிருந்தார்.

இதை அடுத்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கும் தலைவர் ஒருவரே அதனை எதிர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால் தான் நிதி ஒதுக்கீடு என்ற முடிவை கைவிடுமாறு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 23-01-1968 அன்று "மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள பாடத்திட்டத்திலிருந்து இந்தி மொழி முழுமையாக அகற்றப்பட வேண்டும்" என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி பாடத் திட்டத்திலிருந்து அகற்றப்பட்டது. பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையை மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களும் கடைபிடித்தார்கள்.
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டுமென்றும் குரல் கொடுத்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தால் தான் 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' (SSA) திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் கூறியிருப்பது ஏறு கொள்ளக் கூடியதல்ல. இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமம்.
எனவே, மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து தமிழ்நாட்டிற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications