'சிறுமியின் விருப்பத்துடன் உறவு வைத்தாலும்'.. போக்சோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
சென்னை: சென்னையைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கு எதிரான போக்சோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பினை பிறப்பித்துள்ளது. சிறுமியின் விருப்பத்துடன் உறவு வைத்திருந்தாலும் அதனை ஏற்க முடியாது என்றும், போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது ஐகோர்ட்.
சென்னையைச் சேர்ந்த 25 வயதாகும் சதீஷ்குமார் கடந்த 2014-ம் ஆண்டு, 15 வயது சிறுமியை திருத்தணி கோவிலில் வைத்து திருமணம் செய்திருக்கிறார். பின்னர், ஒகேனக்கல் சென்று அங்கு சில நாட்கள் தங்கியிருக்கிறார். தங்கள் மகளை காணவில்லை என அவரது பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் சென்னை திரும்பிய அந்த சிறுமி காவல் நிலையத்தில் ஆஜரானார். இதன்பின்பு, பெற்றோருடன் அந்த சிறுமி அனுப்பி வைக்கப்பட்டார்.

சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள் இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ நீதிமன்றம், கடந்த 2018-ம் ஆண்டு சதீஷ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்திருக்கிறது. இந்த தண்டனையை எதிர்த்து சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா முன்னிலையில் நடந்தது.
அப்போது சதீஷ்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரரும், சிறுமியும் காதலித்து வந்திருக்கிறார்கள். சிறுமியின் விருப்பத்தின் பேரில் தான் மனுதாரர் சிறுமியுடன் உறவு வைத்திருக்கிறார். எனவே, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதாடினார்.
இதை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா, 'பாதிக்கப்பட்ட சிறுமி மைனர். அவர் விருப்பத்தின் பேரில்தான் மனுதாரர் உறவு கொண்டதாக கூறுவதை ஏற்க இயலாது. தற்போது அந்த சிறுமிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்திருக்கிறது. மனுதாரர் சிறுமியிடம் நடந்து கொண்டது எப்போதும் அவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். மனுதாரர் கடுமையான குற்றச்செயலில் ஈடுபட்டிருக்கிறார். மனுதாரருக்கு தற்போது 25 வயது ஆகிறது.
சிறுமியுடன் உறவு கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளை அவர் அறியாமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது' இவ்வாறு உயர்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications