சென்னையில் ரூ.15 கோடி வீடு.. ஆக்கிரமித்தவரையே சாவியை கொடுக்க வைத்த அமெரிக்க பேத்தி.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் உள்ள தனது தாத்தாவின் 15 கோடி மதிப்பிலான வீட்டை அமெரிக்கா வாழ் பெண் போராடி மீட்டார். தனது தாத்தாவின் பூர்வீக வீட்டை போலீசாரின் உதவியுடன் மீட்டு சாவியை வாங்கினார். உறுதியான நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டுக்கொடுத்த போலீசாருக்கு அமெரிக்க வாழ் பெண் நன்றி தெரிவித்தார்.
சென்னையில் வீடு அல்லது இடம் வாங்கிட்டு வெளிநாடு சென்றவர்கள், பின்னாளில் பெரிய சிக்கல்களை சந்திக்கும் நிலை அடிக்கடி ஏற்படுகிறது. சரியாக வந்து செல்லாமல் இருந்தாலோ அல்லது கவனிக்காமல் விட்டாலோ , அதை கண்டுபிடித்து தங்கள் பெயரில் போலி பட்டா போடுவதற்கு கும்பல் கும்பலாக சிலர் அலைகிறார்கள். வாரிசு இல்லாத வீடுகள், வயதானவர்களை குறிவைத்து மோசடிகள் நடப்பது அதிகமாக உள்ளது.

சென்னையில் நிலத்தின் மதிப்பு கோடிகளில் இருப்பதால், அரசு நிலமாக இருந்தாலும், அடுத்தவர் நிலமாக இருந்தாலும் துணிந்து சண்டை போட்டு ஆக்கிரமிக்கும் நிலை இருக்கிறது. இதில் மிக கவனமாக இருப்பவர்கள் மட்டுமே தப்பிக்கிறார்கள். மற்றவர்கள் காவல்துறையில் புகார் அளித்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.
அப்படித்தான் சென்னையில் உள்ள தனது தாத்தாவின் வீட்டை சிலர் ஆக்கிரமித்த நிலையில், அமெரிக்காவில் வாழும் தமிழக பெண், போராடி மீட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம். சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் டீனாக பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர் விக்டர் என்பவருக்கு அமைந்தகரை அடுத்த செனாய் நகர் பகுதியில் வீடு உள்ளது. சுமார் 2 கிரவுண்ட் நிலத்தில் விக்டர் பார்த்து பார்த்து கடடிய வீட்டில் அவரது குடும்பத்தினர் குடியிருக்கவில்லை.. இந்த வீட்டை பல ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒருவரை பராமரித்து கொள்ளுமாறு கூறிவிட்டு விக்டர் அமெரிக்கா சென்று விட்டார்.
தற்போது விக்டர் மற்றும் அவரது மனைவி உயிருடன் இல்லை. சென்னையில் உள்ள இந்த வீட்டை பார்ப்பதற்கு விக்டரின் குடும்பத்தினர் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அப்போது வீட்டை பார்த்து கொள்ள நியமித்து இருந்தவர்கள் அந்த வீட்டை தங்களது வீடு என சொந்தம் கொண்டாடியதுடன், அவர்களது வீட்டில் உள்ள நாய்களை ஏவி விட்டதுடன் அசிங்கமாக பேசி துரத்தி உள்ளனர். மேலும் இந்த பக்கம் வரக்கூடாது என்று மிரட்டி உள்ளனர்.

இந்த நிலையில் டாக்டர் விக்டரின் பேத்தியான தீபாவின் பெயரில் அந்த வீடு பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அமெரிக்காவில் கார்ட்டூன் டப்பிங் கலைஞராக உள்ள தீபா, சென்னைக்கு வரும் போதெல்லாம் தனது தாத்தாவின் பூர்வீக வீட்டுக்கு சென்று தீபா பார்த்து வந்தார். அப்போது அங்கிருந்த தினேஷ் வீட்டை விட்டு வெளியே செல்ல மறுத்து விட்டாராம். இதையடுத்து அமெரிக்க வாழ் பெண்ணான தீபா, தங்களது பூர்வீக வீட்டை சிலர் அபகரித்து கொண்டதாக வடசென்னை போலீஸ் கமிஷனர் அஸ்ரா கார்க்கை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அதுபற்றி விசாரிக்கும்படி அமைந்தகரை போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் அமைந்தகரை போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தினேஷ் என்பவர் தீபாவின் பூர்வீக வீட்டை அபகரித்து வைத்துக்கொண்டு சொந்தம் கொண்டாடியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தினேசை வீட்டை விட்டு வெளியேற்றிய போலீசார், அந்த வீட்டின் சாவியை மீட்டு தீபாவிடம் ஒப்படைத்தனர். பல ஆண்டுகளாக தனக்கு சொந்தமான வீட்டுக்கு செல்ல முடியாமல் பரிதவித்த தீபா, பல வருட போராட்டத்துக்கு பிறகு சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான தனது தாத்தாவின் பூர்வீக வீட்டை மீட்டார். இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து உதவிய போலீசாருக்கு தீபா நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications